சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை 05.04.2017

sisi-trump

1- வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார் சிசி

கடந்த 2013 ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கையின் மூலம் மூர்சியின் ஆட்சியை கவிழ்த்து பதவியேற்ற பிறகு முதல் முறையாக எகிப்தின் அதிபர் அப்துல் ஃபத்தாஹ் சிசி வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார். இந்த வருகையின் போது ‘எகிப்தில் புரட்சி செய்தவர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்த சிசியை ஒபாமா அரசு கண்டித்த நேரத்தில் தாம் சிசிக்கு ஆதரவாக இருந்ததாக’ அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். பதிலுக்கு “டிரம்பின் தனித்தன்மை மிக்க குணத்தை பார்த்து தாம் பெருமிதம் கொள்வதாக” சிசி கூறினார். ‘பேச்சுவார்த்தையில் டிரம்ப் இருநாடுகளுக்கு மத்தியிலான உறவை மேம்படுத்த விரும்புவதாக’ அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிசியுடன் சந்தித்த டிரம்ப், இந்த உறவை தற்பொழுது மேலும் வலுப்படுத்த தாம் விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்தார். டிரம்ப் அரசின் மூத்த அதிகாரி கூறுகையில் “ திங்கட்கிழமை நடக்கவிருக்கும் சந்திப்பில் மனித உரிமைகள் பேச்சுவார்த்தை பேசப்படும் ஆனால் இந்த பேச்சுவார்த்தை தனிமையில், ரகசிய முறையில் நடக்கும்” என கூறினார். வாஷிங்டனின் மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் இயக்குனர் சாரா மார்கன் (Sarah Margon) இந்த ரகசிய பேச்சுவார்த்தையை எதிர்த்துள்ளார். “பல ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் சிறையில் சிக்கி வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில் சிசியை வாஷிங்டனுக்கு வர அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தது – மூலோபாய உறவை (Srategic relationship) நிலைபடுத்துவதில் ஆச்சரியமான வழிமுறையாகும்” என அவர் கூறினார். இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி பேச்சுவார்த்தை, ஐ.எஸ் க்கு எதிரான போராட்டம் போன்ற பல பிராந்திய பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு அதிபர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2- சிக்கலில் இருக்கும் பஹ்ரைனின் முடியாட்சி

இராணுவ நீதிமன்றம் பொதுமக்களின் பிரச்சனைகளை விசாரிக்கலாம் என்ற அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு கடந்த திங்கட்கிழமை பஹ்ரைனின் மன்னர் ஒப்புதல் வழங்கினார். இந்த புதிய திருத்த சட்டத்தின்படி, நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவர்கள் என்று சொல்லக்கூடிய பொதுமக்களின் மீது விசாரணை செய்வதற்கான அதிகாரம் இராணுவ நீதிமன்றத்துக்கு கிடைக்கும். ஈரானுடைய ஆதிக்கத்தை தடுப்பதற்காகவே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் அஹ்லுஸ் சுன்னாவாக இருக்கும் பஹ்ரைன் தலைமைத்துவம் ஷியாக்கள் அதிகமாக வாழக்கூடிய நாட்டை கட்டுபடுத்த முடியும். காலம் காலமாக, தன் சொந்த பிராந்தியத்தில் ஈரானுடைய ஆதிக்கத்தை தடுக்க, எப்போதெல்லாம் பஹ்ரைன் அரசுக்கு பாதிப்பு வருமோ அப்போதெல்லாம் சவுதி அரசாங்கம் உதவிக்கு விரைந்து செல்வதை நாம் பார்க்க முடியும். ஈரானின் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக புரட்சி செய்வதை இந்த திருத்தம் தடுக்கும் என அதிகாரிகள் நியாயப்படுத்தினர். ஷிஆவின் முக்கிய தலைவரான ஷேக் அலி சல்மான், அரசை இழிவுபடுத்தியதற்காகவும் அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டியதற்காகவும் வழங்கப்பட்ட சிறை தண்டனையின் கால அளவை முடியரசின் உச்ச நீதிமன்றம் குறைத்திருந்த நேரத்தில் இத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்தரப்பினர் ஷிஆ ஈரானுடன் சேர்ந்து நாட்டில் அமைதியை கெடுக்க நாடுகிறார்கள் என பஹ்ரைன் முடியரசு குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே அரசுக்கு எதிரான கொள்கையிலிருக்கும் பொது மக்களை ஈரான் அரசு உணர்ச்சி வசப்படுத்தி வருகின்றது, அதிலும் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கதையாக இருக்கும் என்பது தெளிவாகின்றது.

3- சிரியாவின் மீது விஷவாயு தாக்குதல்

பஷார் அல்- அசாதை நீக்குவது நாட்டின் முக்கிய குறிக்கோளாக இருக்காது என ஐ.நா வுக்கான அமெரிக்க தூதர் அறிவித்த அடுத்த நாளே சிரியாவில் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஷாரை பொறுத்தவரை அமெரிக்காவின் இந்த முடிவு பொதுமக்களின் மீதான தாக்குதலுக்கு – குறிப்பாக இரசாயன தாக்குதலுக்கு- பச்சை கொடி காட்டியது போல் அமைந்துள்ளது. வட மேற்கு மாகாணமான இத்லிபின் கான் ஷெய்குன் (Khan Sheikhun) நகரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் அதில் அனைவருமே பொதுமக்களாக இருந்துள்ளனர். அடிக்கடி நடக்கும் இந்த இரசாயன தாக்குதல்கள், சிரியாவின் போரில் அசாதின் அரசு இரசாயன தாக்குதல்களை வழக்கமாக்கியுள்ளது என்பதையே குறிக்கின்றது. மேற்கத்திய ஊடகங்களும் மேற்கத்திய அரசுகளும் இத்தாக்குதலை பற்றி மட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்துவது, அவர்கள் இது வரை கொல்லப்பட்ட பல உயிர்களை விட சில உயிர்களையே முன்னிருத்துகிறார்கள் என்பதை உறுதிபடுத்துகின்றது. அதேசமயம், சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகள் உம்மத்தை பாதுகாக்க சக்தியிருந்தும் பாதுகாக்க மறுக்கிறார்கள் என்பதையும் தெளிவு படுத்துகின்றது.

Comments are closed.