சமீப பதிவுகள்

ஆய்வுகள்

லைலத்துல் கத்ர் (இரவின்) முக்கியத்துவமும் முஸ்லீம் உம்மத்திர்க்கான படிப்பினையும்

Laylatul-Qadr
அல்லாஹ் அஸ்ஸவஜல், ஸூராஹ் அல் கத்ரில் கூறுகிறான்..

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ * وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ * لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ * تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ * سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
திண்ணமாக, நாம் இதனை (குர்ஆனை) மேன்மை மிக்க இரவில் இறக்கி வைத்தோம். மேன்மை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன? மேன்மை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்! அதில் வானவர்களும் ரூஹும் (ஜிப்ரீல்) தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகின்றார்கள். அந்த இரவு முழுவதும் நலம் பொருந்தியதாகத் திகழ்கின்றது, வைகறை உதயமாகும் வரை!

ரஸூலுல்லாஹ் (ஸல்) இந்த இரவின் சிறப்பை பற்றி கூறுகையில்

«مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِ»

“எவர் ஒருவர் இஹ்லாசான நம்பிக்கையோடு, அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்”.

லைலத்துல் கத்ர் இரவை அடையாளம் காட்டும் வகையில் ரஸூலுல்லாஹ் (ஸல்) கூறுகையில்.

«تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ»
“ரமதானின் இறுதி பத்து நாட்களின் ஒற்றைப்படையில் லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ளுங்கள்”. என்று கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்களாகிய நாம் இந்த இரவில் அல்லாஹ்வின் திருபொறுத்தத்தை நாடி தொழுகை, திக்ர், துஆ, குர்-ஆன் ஓதுதல், பாவமன்னிப்பு கோருதல் போன்ற அமல்களில் ஈடுபடுவதோடு , அதேசமயம் இந்த இரவிற்கு அல்லாஹ் கொடுத்துள்ள மகிமையின் பின்னணியை சிந்தித்து பார்த்து படிப்பினையை பெறவேண்டும்.

முதலாவதாக இந்த இரவின் பெயரே அதன் சிறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது “லைலத்துல் கத்ர்” (மகிமைமிக்க இரவு).

وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன?

நிச்சயமாக அல்லாஹ் அறிவித்ததால் மட்டுமே அன்றி அந்த இரவின் மகிமையை நாம் அறிந்திருக்க இயலாது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான், இந்த இரவில் மலக்குகள் விண்ணிலிருந்து அல்லாஹ்வின் அருட்கொடையோடும், கருணையோடும், சலாமை கொண்டு இறங்குகிறார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதருக்கு வஹியை கொண்டுவந்த மேன்மைமிக்க வானவரான ஜிப்ரீல் அவர்களும் இந்த இரவில் இறங்குகிறார்கள். இந்த ஒரு இரவில் மேற்கொள்ளப்படும் அமல் 1000 மாதங்களுக்கும் மேல் புரிந்த அமல்களைவிடவும் மேலானதாகும்.

இத்தனை சிறப்புமிக்க ஒரு இரவாக இந்த லைலத்துல் கத்ர் இரவு இருபதற்கான மற்றொரு அம்சத்தை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் அது என்னவெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதகுலத்தை வழிநடத்த இறுதி தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களை நியமித்து இறுதி வேதமான அல்-குர்ஆணை வஹியாக இறக்கியருளப்பட்ட தருணம் இந்த லைலத்துல் கத்ர் இரவுதான்.

أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ * فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ *
(ஸூராஹ் அத்துக்கான் 44 : 3,4 )

நாம் இதனை(குர்-ஆனை), அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில், நாம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம்! அது எத்தகைய இரவு எனில், அதில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் விவேக மிக்க தீர்ப்பு நம்முடைய கட்டளையினால் பிறப்பிக்கப்படுகின்றது.

லைலத்துல் கத்ர் இரவின் முக்கியத்துவம் என்பது அல்-குர்ஆன் அருளப்பட்ட விஷயத்தோடு தொடர்புடையது, மேலும் அல்-குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ள நேர்வழி மட்டும் கட்டளைகளோடு தொடர்புடையது. ஜாஹிலிய்யா எனும் இருளிலிருந்து இஸ்லாத்தின் ஒளியின் பக்கம் ஒரு புதிய வாழ்க்கை வழிமுறையின் பக்கம் மக்களை வழிநடத்த அனுப்பப்பட்ட இறைசெய்தியை நிலைநாட்டுவதோடு தொடர்புடையது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அல்லாஹ் அஸ்ஸவஜல், ஸூராஹ் அர்-ராதில் கூறுகிறான்.

وَلَوْ أَنَّ قُرْآنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ الأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ الْمَوْتَى بَل لِّلّهِ الأَمْرُ جَمِيعًا

(ஸூராஹ் ஆர்-ராத்)

வேறொரு குர்ஆன் (இறக்கியருளப்பட்டு அதன்) மூலம் மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது பூமியை பிளக்கச் செய்தாலும், அல்லது இறந்தவர்களை எழுப்பிப் பேசச் செய்தாலும் என்ன நேர்ந்திடப்போகிறது? (இதுபோன்ற சான்றுகளைக் காண்பிப்பது சிரமமான செயலே அல்ல) உண்மையில் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன.

இந்த குர்-ஆன் பெரும் மலைகளையும் நகர்த்த வல்லமை கொண்டது. இதில் அந்த அளவிற்கு கருத்துகளும், வழிகாட்டுதல்களும், மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.

வறுமையை போக்குவது:

இன்றைய நிலையில் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர், நாளொன்றுக்கு 21000 பேருக்கும் மேல் பசி, வறுமை, மற்றும் சுகாதாரமின்றி செத்து மடிந்து வருகின்றனர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த பூமியில் எண்ணற்ற அளவில் மக்களுக்கு தேவையான அளவில் வளங்களை ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ் சுபுஹானவதாலா கூறுகிறான்..
وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ
அனைவருக்காகவும் அவரவரின் தேவைக்கு ஏற்ப சரியான அளவில் அதனுள் உணவுப் பொருட்களை செய்து வைத்தான்
(ஸூராஹ் ஃபுஸ்ஸிலத் :10 )

இன்று நம் முஸ்லீம் சகோதர சகோதரிகளின் நிலைமையை ஆய்வு செய்தால் மிகவும் வருத்தத்திற்குரியதாக உள்ளது. வெறும் ரொட்டி துண்டுகளையும் சுகாதாரமற்ற தண்ணீருமே அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கின்றது. எண்ணற்ற அளவில் எண்ணெய், கனிமங்கள், விவசாய வளங்களை முஸ்லிம் உம்மத்தின் நிலப்பரப்பு கொண்டுள்ளபோதும் இந்த உம்மத் வறுமையின் கோரப்பிடியை சந்தித்து வருகிறது. நைஜீரியாவின் விவசாயம் ஆப்பிரிக்கா முழுவதற்கும் உணவு வழங்க போதுமானது, பாகிஸ்தானின் 2% தார் நிலக்கரி இருப்பு மட்டுமே பாகிஸ்தான் முழுவதற்கும் 40 வருடத்திற்கு மின்சாரம் விநியோகிக்க போதுமானது.

சுபுஹானல்லாஹ்!! இந்த அளவிற்கு வளங்களை பெற்றிருந்தும் முஸ்லீம் உம்மத்தின் வறுமைக்கான காரணம் என்னவென்றால், இஸ்லாமிய பொருளாதார கொள்கையை முஸ்லீம் நாடுகளின் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாததே. ஆனால் இஸ்லாமிய அரசான கிலாஃபாஹ்வின் காலகட்டத்திலோ அரசு கருவூலத்திலிருந்து (பைத்துல்மால்) மக்களின் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கிய பிறகும் அதிகமான நிதி இருந்தமையால் கடனாளியின் கடனுக்கு பொருப்பேற்றதோடு இல்லாமல், திருமணம் முடிக்க மஹர் கொடுக்க இயலாத நபர்களுக்கான மஹர் பொறுப்பையும் ஏற்ற அரசு இஸ்லாமிய கிலாஃபாஹ் அரசு மட்டுமே. இந்த அளவிற்கு பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இஸ்லாமிய சமூகம் இருந்தமைக்கு முக்கிய காரணம் இஸ்லாமிய பொருளாதார கொள்கையை கிலாஃபாஹ் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியதுதான். நாம் அல்-குர்ஆனை தனிநபராக பின்பற்றி ஸகாத்தை கொடுத்தால் மட்டும் வறுமை நீங்கிவிடும் என்று நினைத்தால் அது தவறு, அல்-குர்ஆனின் பொருளாதாரம் சார்ந்த சட்டங்கள் அரசு மூலமாக முழுமையாக நடைமுறை படுத்தும்போது மட்டுமே வறுமை முற்றிலும் துடைத்தெரியப்படும்.

நீதத்தை நிலைநாட்டுவது:

இன்றைய முஸ்லீம் உலகின் ஆட்சியாளர்கள் உம்மத்தின் மீது அடக்குமுறையை மேற்கொண்டு வருகின்றனர் அது ஜனநாயகம், மன்னராட்சி, இராணுவ சர்வாதிகார ஆட்சி என்ற பல பரிணாமங்களில் செயல்படுவதை நாம் காணலாம். முஸ்லீம் உலகின் அதிகார வர்கத்தினர் தனது ஆட்சிக்கெதிரான எந்த போக்கையும் இரும்புக்கரம் கொண்டு தடுத்து வருகின்றனர். இந்த ஆட்சியாளர்கள் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் வைத்துக்கொண்டு, இஸ்லாம் கூறிய எண்ணெய் வளம் உள்ளிட்ட பொது சொத்துக்களை அரச குடும்பத்தின் தனிச்சொத்தாக அமைத்துக்கொண்டு, இஸ்லாமிய ஷரியத்திற்கு மாற்றமாக தமது விருப்பம்போல் அரசியல் சாசன சட்டங்களை மாற்றியமைத்துக்கொண்டு மக்களுக்கெதிராக அதிகார துஷ்பிரயோகத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த ஆட்சியாளர்களின் அநீதத்தை சுட்டிக்காட்டும் இஸ்லாமிய அழைப்பாளர்களை சிறையிலடைப்பதையும், சித்ரவதைக்கு உட்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது போன்ற அநீதங்கள் முஸ்லிம்களின் நிலப்பரப்பில் ஆட்சியாளர்களால் மக்கள் மீது அரங்கேற்றப்படுவதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் நிலப்பரப்பில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாமல் இருப்பதே. இஸ்லாமிய ஆட்சி அமைப்பை கைவிட்டுவிட்டு, மனித சிந்தனையின் அடிப்படையில் தோன்றிய ஜனநாயகம், மன்னராட்சி, அடக்குமுறை ஆட்சி போன்றவை மக்கள் மீது அடக்குமுறையை கையாண்டு அதிகாரத்தை தக்கவைப்பதையே முதன்மையாக கொண்டு செயல்படுகிறது.

இஸ்லாமிய ஆட்சி அமைப்பானது இன்றைய ஆட்சி அமைப்பிலிருந்து முற்றிலும் மாற்றமானது. இஸ்லாமிய அரசு குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் அடிப்படையில் செயல்படும் ஆட்சி அமைப்பை கொண்டது, இதில் ஆட்சியாளர்களோ, மக்கள் பிரதிநிதிகளோ சட்டம் இயற்ற முடியாது, குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் பெறப்பட்ட சட்டங்களை நடைமுறை படுத்தித்துவதே ஆட்சியாளரின் பணி. குடிமக்களை வேவுபார்க்கவோ, வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்து துன்புறுத்தவோ ஆட்சியாளருக்கும், காவல்துறைக்கும் அனுமதி இல்லை. வெளிப்படையான ஆட்சி அமைப்பு, பாகுபாடின்றி நீதியை நிலைநாட்டும் நீதித்துறை இவையெல்லாம் இஸ்லாமிய அரசின் அங்கமாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,

فَاحۡكُمۡ بَيۡنَهُمۡ بِالۡقِسۡطِ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُقۡسِطِيۡنَ
(5:42)

மேலும், தீர்ப்பு வழங்குவீராயின் அவர்களிடையே நீதியைக் கொண்டே தீர்ப்பு வழங்குவீராக! திண்ணமாக, அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.

குலஃபாஹ் ராஷிதீன்களான அபு பக்கர், உமர், உஸ்மான், அலி (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக) அவர்களின் ஆட்சி காலத்தில் நீதம் மேலோங்கியிருந்தது, கலீபாஹ் உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் நீதத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். வரலாற்றின் பல பக்கங்களில் இஸ்லாமிய கிலாஃபாஹ் அரசு நிலைநாட்டிய நீதத்தை நாம் பார்க்க முடியும்

அப்பாசியா கிலாஃபாவில் அல் மாமூன் அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது வாரத்தில் ஒரு நாளை பொதுமக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வதர்க்கென்றே ஒதுக்கியுள்ளார், ஒரு சமயம் ஒரு முதிய பெண்மணி கலீபாஹ் மாமூனிடம் தனது சொத்தை ஒரு கொடிய நபர் அபகரித்து கொண்டதாக குற்றம் சாட்டினார், அதற்கு கலீபாஹ் அந்த நபர் யார் என்று வினவியதற்கு அந்த பெண்மணி தங்கள் அருகில் அமர்ந்திருக்கும் நபர்தான் என்று கலீபாவின் மகன் அப்பாஸை சுட்டிக்காட்டி உரத்த குரலில் வாதத்தை சமர்பித்தால், அந்த முதிய பெண்மணியின் வாதத்தில் நியாயம் இருந்ததால் கலீபாஹ் மாமூன் தனது மகனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார். இதெல்லாம் இஸ்லாமிய அரசான கிலாபாஹ் நிலைநாட்டிய நீதமான ஆட்சியின் சில உதாரணங்களே. குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் செயல்படும் ஆட்சி அமைப்பான கிலாபாஹ் மட்டுமே அல்லாஹ் அருளிய சரியான சட்டங்களை கொண்டு நீதியை நிலைநாட்ட முடியும் மற்ற ஆட்சிஅமைப்புகளோ மனிதனின் இச்சையின் அடிப்படையில் இயற்றப்பட்ட ஒருதலைபட்சமான சட்டங்களையும் அதிகார வர்கத்திர்க்கு ஏற்றவாறு வளைத்து நெளித்து செயல்படுத்தும் போக்கை நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்களின் உயிர், உடமை மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பது:

இன்று உலகெங்கிலும் முஸ்லிம்கள் சொல்லோனா இன்னல்களை சந்தித்து வருவதை நாம் அன்றாடம் அறிந்ததே, சிறிதளவும் பாதுகாப்பின்றி சிரியா, பலஸ்தீன், பர்மா, ஈராக், ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கா, சீனா போன்ற நாடுகளில் குழந்தைகள், பெண்கள் என்ற பாகுபாடின்றி முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கருவருக்கப்படுவதை அறிந்தும் அருகிலுள்ள எந்த ஒரு முஸ்லீம் நாட்டின் ஆட்சியாளரும் முஸ்லிம்களை பாதுகாக்க தங்களின் இராணுவத்தை அனுப்பவில்லை. முஸ்லிம்களின் உயிர், உடமை மற்றும் கண்ணியம் என்பது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத நிலைக்கு இந்த உம்மத் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கான நேரடி காரணம் நமது நிலப்பரப்புகளை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் ஆட்சிசெலுத்தாமல் தங்களின் மன இச்சை
யின் அடிப்படையில் ஆட்சி செலுத்திக்கொண்டும், தங்களின் ஆட்சியை தக்கவைப்பதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்திவருகின்றனர். அல்லாஹ்வின் வசனங்களை இவர்கள் செவிமடுத்து அதற்கு பதிலளிக்காத குற்றவாளிகளாக இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளார்கள்.

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا (ஸூராஹ் அந்-நிஸா :75)

மேலும், பலவீனர்களாக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள் (ஸூராஹ் அந்-நிஸா :75)

அல்லாஹ் ஸூராஹ் ஹுஜராத்தில் கூறுகிறான்

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக் கூடும்.(49:10)

மேலும் ஸூராஹ் அல்-அன்பியாவில் அல்லாஹ் கூறுகையில்..

إِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونِ
(21:9)

நிச்சயமாக இந்தச் (முஸ்லீம்) சமுதாயம் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள் (21:92)

முஸ்லீம் உம்மத்தின் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் அக்கரையின்றி ஒரே சமுதாயமாக ஒற்றுமையாக செயல்படுவதின் கட்டாயத்தை புறக்கணித்து, இன்று தேசியவாத அடிப்படையில் முஸ்லிம்கள் பிரிந்து செயல்படுவதை ஆதரித்து கொண்டும், தங்களது ஆட்சியை பாதுகாத்து கொள்வதிலே கண்ணும் கருத்துமாக செயல்படும் இந்த ஆட்சியாளர்களை முஸ்லீம் உம்மத் இனம்கண்டறிந்து புறக்கணிக்க வேண்டும். அன்றைய இஸ்லாமிய கிலாஃபாஹ் அரசானது முஸ்லிம்களின் பாதுகாப்பை மிகமுக்கிய கடமையாக கருதி முஸ்லீம் உம்மத்தை இஸ்லாமிய இராணுவம் மூலம் பாதுகாத்தது.

நபி (ஸல்) கூறுகிறார்கள்

இமாம் (கலீபாஹ்/அமீர்) உங்களின் கேடையமாவார் அவர் பின்னாலிருந்து போர் புரியுங்கள் அவர் பின்னாலிருந்து பாதுகாப்பு பெறுவீர்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)

9ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவம் ஒரு மிகப்பெரும் முன்னுதாரணம். அன்றைய இஸ்லாமிய அரசின் கலீஃபாவாக முஃதஸிம் பில்லாஹ் அவர்கள் பொறுப்பில் இருந்தார்கள், அப்போது ரோம பேரரசின் சிப்பாய் ஒரு முஸ்லீம் பெண்ணை கைதுசெய்து துன்புறுத்த அந்த முஸ்லீம் பெண் ஓ முஃதஸிம் என கலீபாவின் பெயரை ஓங்கி உச்சரித்தால், இந்த செய்தி கலீஃபாவை சென்றடைய அவர் 90,000 முஸ்லீம் இராணுவ வீரர்களை கொண்ட மிகப்பெரும் இஸ்லாமிய இராணுவத்தை அனுப்பி அந்த முஸ்லீம் பெண்ணை காப்பற்றியதோடு மட்டுமின்றி அமூரியா என்ற ரோம நகரையும் கைப்பற்றி இஸ்லாமிய நிலபரப்போடு இணைத்தனர்.

இஸ்லாமிய அரசு ஒரே நிலபரப்பாக ஒன்றுபட்ட உம்மத்தாக கலீஃபாவின் கீழ் ஒன்றிணைந்த இராணுவமாக இருந்தபோது இந்த உம்மத் பாதுகாப்பை பெற்றிருந்தது, இஸ்லாமிய அரசின் கீழ் ஷரியத்தின் நிழலில் வாழ்ந்தபோது பெற்ற பாதுகாப்பை இப்போது இழந்துவிட்டு நிற்கதியாய் நிற்பதற்கு காரணம் இஸ்லாமிய ஷரியத்தை நடைமுறைப்படுத்தும், கிலாபாஹ் அரசின் நிழலின் கீழ் வாழாமல் இருப்பதே.

ஆதலால் இந்த ரமதானின் முக்கியத்துவத்தையும், லைலத்துல் கத்ர் இரவின் மகிமையை வெறும் குர்ஆனை ஓதுவதோடும், நின்று வணங்குவதின் நன்மைகளோடு மட்டும் தொடர்புடையதாக கருதி நின்றுவிடாமல், இந்த அல் குர்ஆன் முழு மனிதகுலத்திற்கான வழிகாட்டுதலை உள்ளடக்கிய புத்தகம் என்பதையும், இந்த இஸ்லாம் முழு மனிதகுலத்தின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கொண்டுள்ள மார்க்கம் என்பதையும் நினைவுபடுத்தி, அப்படிப்பட்ட வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சட்டதிட்டங்களை கொண்ட இஸ்லாமிய அரசை நிலைநாட்டி சமுதாயத்தில் வறுமையை நீக்கி, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, சமூகத்தில் நீதியை நிலைநாட்டி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதை இந்த லைலத்துல் கத்ர் இரவோடு தொடர்புடைய செயல்களாய் நாம் கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

Comments are closed.