சமீப பதிவுகள்

செய்தி பார்வை 16.03.2018

ஜெர்மன் உள்துறை அமைச்சர்: இஸ்லாமிய மார்க்கம் ஜெர்மனிக்கானதல்ல

பாகிஸ்தான் (MIRV) ஏவுகணைகள் சாதனை

இஸ்லாத்தின் போர்க்கொள்கைகளை வீழ்த்த நினைக்கும் சவூதி!

1.ஜெர்மன் உள்துறை அமைச்சர்: இஸ்லாமிய மார்க்கம் ஜெர்மனிக்கானதல்ல

ஜெர்மனியின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஹோர்ஸ்ட் அந்நாட்டு பிரபல இதழான பில்ட் கு அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள்.

முதல் கருத்து

இஸ்லாம் ஜெர்மனியின் கலாச்சாரத்துடன் பொருந்தக்கூடியதாக இல்லை என்கிறார். ஒரு கலாச்சாரம் என்பது ஒரு அடிப்படையை மையமாக கொண்டு வெளிப்படுவது. ஜெர்மனியின் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட கலாச்சாரமும், தீனை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய கலாச்சாரமும் நிச்சயம் ஒன்றல்ல. இரண்டின் அடிப்படையும் வெவ்வேறாக இருக்கும் போது, இந்த இரண்டு கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பார்வையே அடிப்படையில் தவறு. இஸ்லாம் மனித சிந்தனையில் இருந்து வெளிப்படும் எந்த ஒரு கலாச்சாரத்தோடும் ஒரு போதும் ஒத்துப்போகாது.

இரண்டாவது கருத்து

கிறிஸ்துமஸ், ஈஸ்டர், போன்ற பண்டிகைகள் அரசு விடுமுறையாக இருப்பதும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளாக இருப்பதும், மக்களின் பழக்கவழக்கங்களில் கிறிஸ்தவமதம் பின்னிப்பிணைந்து இருப்பதும், ஜெர்மனியின் கலாச்சாரம் என்பது கிறிஸ்தவத்தை அடிப்படையாக கொண்டது என்ற கருத்தை நிறுவ விரும்புகிறார். இஸ்லாம் ஜெர்மனிக்கானதல்ல என்றால், எது ஜெர்மனிக்கானது என்று இயல்பாக எழும் கேள்விக்கு தனது இரண்டாவது கருத்தில் விடை அளித்துள்ளார்.

மூன்றாவது கருத்து

ஜெர்மனியில் வாழும் முஸ்லிம்கள், ஜெர்மனியின் குடிமக்களே என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே குடிமக்களாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை மீண்டும் அவர்கள், அவர் அவ்வாறு கூறியதற்கான காரணம், ஜெர்மனியில் வாழும் முஸ்லிம்கள் ஜெர்மனியின் கிறிஸ்தவ கலாச்சாரத்தோடு பொருந்தி வாழ வேண்டும். ஜெர்மனியின் தேசியவாத சிந்தனைகளை ஏற்று கொள்ளவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

நான்காவது கருத்து

குடியுரிமை மறுக்கப்பட்ட அகதிகளை விரைவில் ஜெர்மனியில் இருந்து வெளியேற்றுவதாக கூறியுள்ளார். இக்கருத்தை மூன்றாவது கருத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, ஜெர்மனியிலேயே வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அந்நாட்டு குடிமக்கள் என்றும், அகதிகளாக வரும் முஸ்லிம்கள் ஜெர்மனியர்கள் அல்ல என்ற கருத்தையே வலியுறுத்த விரும்புகிறார்.

இதன் தொடர்ச்சியாக, உள்துறை அமைச்சகத்தின் பெயரை heimat ministry, அதாவது தாய்நாடு என்று பொருள்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளார். தாய்நாடு என்பது ஹிட்லரின் நாசிச சிந்தனையோடு தொடர்புடைய சொல்லாகும். இதை அரசின் குரலாக பயன்படுத்த முனைவதின் மூலம், ஹிட்லரின் பழைய நாசிச கொள்கையை புதுப்பிக்க முனைகிறார்.

இக்கட்டுரையை படிப்பதற்கு முன் ஹோஸ்ட் பற்றிய சில தகவல்கள், இவர் சார்ந்துள்ள CSU கட்சியுடன் மிக நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே, அக்கட்சியின் ஆதரவை பெற்று ஏஞ்சலா மெர்கல் மீண்டும் அதிபரானார்.தற்போதைய ஜெர்மன் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான AFD கட்சி இவருடைய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற கட்சியாகும்.

இஸ்லாம் ஜெர்மனியின் கலாச்சாரத்துடன் பொருந்தக்கூடியதாக இல்லை என்பதும், அகதிகளை பற்றிய இவருடைய கருத்தும், AFD கட்சியின் பிரதான கோஷமாகும்.

2.பாகிஸ்தான் (MIRV) ஏவுகணைகள் சாதனை.

பாகிஸ்தான் MIRV (multiple independently targetable reentry vehilcle ) எனப்படும் அதிநவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது ஒரு மிக பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்த தொழில் நுட்பம் இப்போது வல்லரசு என்று கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், சீனா நாடுகளிடம் உள்ளது.

இந்த தொழில் நுட்பம் என்னவென்றால், சாதாரணமாக ஏவுகணைகள் ஒரு அணு ஆயுதத்தை மட்டுமே தாங்கி சென்று ஒரே ஒரு இலக்கை மட்டுமே தாக்கி அழிக்கும். மாறாக இந்த MIRV ஏவுகணைகள் பல அணுஆயுதங்களை தாங்கியும், ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்கை தாக்கி அழிக்கும் திறன் படைத்தவை. இந்த தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Agni-V என்ற ஏவுகணை சோதனையை இந்தியா செய்துள்ளது. இதற்கு பதில் தரும் விதமாக “அபாபீல் எனும் இந்த வகை ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் செய்துள்ளளது.

Anti Missile எனும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை தாண்டி இவை சிறப்பாக செயல்படும் என்கின்றனர் தொழில் நுட்ப வல்லுநர்கள். ஏனெனில் அவை ஒரு நேரத்தில் ஒரு ஏவுகணையை மட்டுமே தாக்கி அழிக்கும் திறன் படைத்தவை. எனவே இது போன்று ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் , பல இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்ட MIRV இன்றுள்ள பல வல்லரசு கனவு காணும் நாடுகளுக்கு கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் இந்த தொழில் நுட்பத்தை பெற்று இருப்பது ஆயுத வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாகும். இந்த ஏவுகணை பாகிஸ்தானிடம் இருப்பது ஆசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் எனவும் அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

இது போன்ற சக்திவாய்ந்த தொழில் நுட்பமும், வலிமையான ராணுவமும் படைத்த பாகிஸ்தான் அரசு இதனை தன்னை ஒரு வல்லரசாய் நிலைநிறுத்தவும், இந்தியாவை மிரட்டவும் பயன்படுத்தி வீணடிக்காமல் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் சமுதாயம் மேலோங்க வேண்டும் என்று முடிவு செய்து பயன்படுத்த வேண்டும். இதுதான் உண்மையான சிந்தனை திறன் படைத்த முஸ்லீம் தலைவரின் பொறுப்பு.

3.இஸ்லாத்தின் போர்க்கொள்கைகளை வீழ்த்த நினைக்கும் சவூதி!

முஹம்மது பின் சல்மான் கொண்டு வந்துள்ள “நவீன இஸ்லாம்” எனும் புதிய கொள்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு தேவைப்படுகிறது. அல் காயிதா, ஐ எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் அமெரிக்கா பல ஆண்டுகளாக தோல்வியே கண்டுள்ளது. ஆயிரக்கணக்கான போராளிகளை கொன்றும், அவர்களது வருவாய்க்கான வழிகளை அடைத்தும், சமூக வலைதள கணக்குகளை முடக்கியும் அமெரிக்காவால் அவர்களை வெல்ல முடியாததற்கு காரணம் அவர்களுடைய சித்தாந்தத்தை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை. 9/11 தாக்குதலுக்கு பிறகான ஒப்பீட்டில் ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் அல் காயிதா அமைப்பு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த நிலையில்தான் நவீன சவூதி அரேபியாவின் உருவாக்கத்திற்கு “நவீன இஸ்லாம்” தான் தீர்வு என முஹம்மது பின் சல்மானும் மற்றும் அவரது ஆலோசகர்களும் பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளனர். மேலும் 1979-இல் நடைபெற்ற ஈரான் புரட்சியின் விளைவை எதிர்கொள்ளவே சவூதி பிற்போக்கான வஹாபி இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியது என்றும் கூறி உள்ளார்.

மேலும் அதில் இருந்து மாற இதுவே சரியான நேரம் என்றும், அதற்கு தான் 30 வருடங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், இன்றே இப்பொழுதே அவை ஒழித்து கட்டப்படும் என்று சூளுரைத்துள்ளார்.

இதன் விளைவாக religious police எனப்படும் முதவாக்கல் இன் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கை எதிர்க்கும் உலமாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் சுயமாக தொழில் தொடங்குவது, ராணுவத்தில் பணிபுரிவது மேலும் கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பெண்களுக்கான முன்னேற்றம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் பெண்கள் வாகனம் ஓட்ட இருக்கும் தடையை நீக்குவது என்பதாகும்.

அமெரிக்கா இது போன்று மேலும் பல மாற்றங்களை சவூதி அரசு கொண்டு வர வேண்டும் என விரும்புகிறது. அவைகளில் ஒன்று ஜிஹாத் சிந்தனையை மாற்றி அமைப்பது. தனக்கு தேவைப்பட்டபோது சவுதியை பயன்படுத்தி ஜிஹாத் சிந்தனையை வளர்த்து முஸ்லீம் உம்மத்தை அழிக்க உபயோகித்து விட்டு இப்போது அதனை முழுமையாக அழிக்க விரும்புகிறது. ஏனெனில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அந்த ஜிஹாதிய இயக்கங்கள் இன்று அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியதும், அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவதும் தான். அதில் ஒரு பகுதியாக சவுதியின் பள்ளிகளில் உள்ள பாடநூல்களை மாற்றி அமைப்பது. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் வெறுக்கும் இஸ்லாமிய அடிப்படை கருத்துக்களை பாடநூல்களில் இருந்து நீக்கி விடுவது என்று முடிவு செய்து அதனை மிகவும் தீவிரமாக செயல்படுத்துகிறது. இந்த பணி மிகவும் மந்தமாக நடைபெற்று கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்க அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த ஆண்டே கொண்டு வரும் வகையில் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. மேலும் உலகமெங்கும் உள்ள சவூதி அரசின் ஆதரவில் நடைபெறும் பள்ளிகள், பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களை கண்காணித்து அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களை அந்த அமைப்புகளில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

மேலும் சவூதி அரசு அச்சிட்டு வெளியிட்டுள்ள ஜிஹாதிய கருத்துக்கள் அடங்கிய குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை திரும்பி பெறும் நடவடிக்கையை முனைப்பாக செய்து வருகிறது. இதனை வஹாபிய சிந்தனைகளை பரப்ப சவூதி அரசால் ஏற்படுத்தப்பட்ட அல் ராபிதா இஸ்லாமியா எனும் அமைப்பின் மூலம் செயல்படுத்த உள்ளனர்.

எனவே அமெரிக்கா கடந்த இருபது ஆண்டுகால போரின் மூலம் கற்ற பாடம் என்னவென்றால் இஸ்லாம் எனும் சித்தாந்தந்தை இல்லாமல் ஆக்குவதுதான் போரில் தான் வெற்றி பெற ஒரே வழி, அது இல்லாமல் எந்த வழியிலும் அமெரிக்கா வெற்றி பெற முடியாது என்று அறிந்துள்ளது. இதற்கு சவுதியின் தற்போதைய தலைமையை பயன்படுத்தி அதனை பூர்த்தி செய்து கொள்ள விரும்புகிறது.

இஸ்லாமிய கொள்கைகளை அழிக்க 13 நூற்றாண்டுகளாக முயற்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது இறைவன் அருளிய மார்க்கம். இது வரலாறு நெடுக இது போன்ற சதி முயற்சிகளை சந்தித்து அதனை இறைவனின் அருளால் வெற்றியும் பெற்றுள்ளது. இதை அவ்வளவு சீக்கிரம் அழித்து விட முடியாது. இன்ஷா அல்லாஹ் இந்த மார்க்கம் இறையச்சமுள்ள மக்களை கொண்டு மேலோங்கியே தீரும்.

Comments are closed.