சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்

நம்மில் சில பேர் சென்ற வாரத்தை மற்ற வாரங்களை போல் சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம். ஆனால் சென்ற வாரம் அப்படியாக எளிதில் கடந்து செல்லக்கூடிய வாரமல்ல. கடந்த வாரத்தில்தான் இஸ்லாமிய வரலாறை புரட்டிப்போட்ட இரண்டு பெரிய சம்பவங்கள் வரலாற்றில் நடந்துள்ளது. அதில் ஒன்று ரஜப் 27 இல் நடைபெற்ற நபி (ஸல்) அவர்களின் அல் இஸ்ரா வல் மிராஜ் விண்ணுலக பயணமும், ரஜப் 28 இல் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே தலைமையகமாகவும் பாதுகாக்கும் கேடயமாகவும் இருந்த கிலாஃபா வீழ்த்தப்பட்ட தினமாகும்.

அல் இஸ்ரா வல் மிராஜ் பயணம் என்பது இஸ்லாமிய அழைப்பு பணியில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட தொடர் கடும் சிரமங்களுக்கு பகரமாக அல்லாஹ் (சுபு) தந்த ஒரு உயர்வான வெகுமதியாகும். நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் (சுபு) தன் வல்லமையால் ஒரே இரவில் மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அஃஸாவிற்கு அழைத்துச்சென்று அங்கிருந்து விண்ணுலகிற்கு அழைத்து சென்றான்.

நபி (ஸல்) அவர்களின் பொறுமை, கடும் சிரமங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ்வின் கட்டளைகளில் உறுதியாக இருந்தது மற்றும் அழைப்பு பணியில் அவர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு ஆகிய இவையாவும் படைப்பாளனான அல்லாஹ்வை (சுபு) நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது. இந்த சந்திப்பு என்பது தொடர் துயர சம்பவங்களால் நைந்துபோயிருந்த நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிப்பதற்கு மட்டுமல்லாமல் துன்பங்களுக்கு பின்னால்தான் இலகு இருக்கின்றது என்பதற்கு தெளிவான அத்தாட்சியாகவும் அல்லாஹ் (சுபு) ஆக்கினான். இன்னும் அடக்குமுறை மற்றும் பலஹீனத்திற்கு பின்னால் அல்லாஹ்வின் (சுபு) உதவி மற்றும் வெற்றி நிச்சயம் வரும் என்பதையும் உணர்த்துகிறான்.

நபி (ஸல்) அவர்கள் மிராஜ் பயணம் மேற்கொண்டு அல் பகராவின் இறுதிவசனங்களான ‘ஆமணர்ரசூலு’ வாங்கிக்கொண்டு வந்தது தற்செயலாக நிகழ்த்த ஒரு சம்பவமல்ல. அந்த வசனத்தின் இறுதி வாக்கியம் இவ்வாறு முடிகிறது,

انتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

“காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286)

அல்லாஹ் (சுபு) வாக்குறுதி அளித்தது போன்று இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக சூழ்நிலைகள் மாறத்தொடங்கின. நபி (ஸல்) அவர்களுக்கு எதிர்பாராதவகையில் திடீர் திருப்புமுனையாக மதீனாவிலிருந்து உதவி கிடைத்து மதீனாவிலும் அதைத்தொடர்ந்து மக்காவிலும் இஸ்லாமிய அரசை நிறுவி இஸ்லாமை முழுமையாக நடைமுறை படுத்தினார். இப்பொழுது முஸ்லிம்களின் ஈமான், கண்ணியம் மற்றும் உயிர் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இன்னும் இஸ்லாத்தை உலகம் முழுவதற்கும் எடுத்து செல்வதற்கும் வழி ஏற்படுத்தியது – இஸ்லாமை உலகிற்கு எடுத்துச்செல்லும் பணியை அவர்கள் செம்மையாக செய்தனர்.

மக்களிடம் இஸ்லாமை எத்திவைத்தது மற்றும் இஸ்லாமை இல்லங்களிலும், சமூகத்திலும், அரசாட்சியிலும் நிறுவியதன் மூலமாக தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளையும் பொறுப்புகளையும் மிகஅழகிய முறையில் நிறைவேற்றிய ரசூல் (ஸல்) அவர்கள் தன்னுடைய மரபாக-வழிமுறையாக ஒன்றை நம்மிடம் விட்டுச்சென்றுள்ளார். அதுதான் ரசூல் (ஸல்) அவர்களால் குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய அரசு. நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து வந்த தலைமுறை முஸ்லீம் உம்மாவை வழிநடத்தும் இந்த பணியை நபி (ஸல்) வழிநின்று (அவர்களை பின்பற்றி) நிறைவேற்றினர்.

நூற்றாண்டுகாலமாக, ஒருவர் பின் ஒருவராக நியமிக்கப்பட்ட கலீஃபாக்கள் இஸ்லாமை கொண்டே ஆட்சிசெய்தனர். ஆனால் நபியவர்களின் (ஸல்) இந்த மரபு இதே ரஜப் மாதம் 28 ஆம் தேதியில் (மார்ச் 4, 1924) முடிவுக்கு வந்தது.

இன்றைய தினம்தான் இஸ்லாமிய ஆட்சியமைப்பு முறையான கிலாஃபா இப்பூமியிலிருந்து நீக்கப்பட்டு இஸ்லாமிய நிலப்பரப்புகள் காலனியாதிக்கவாதிகளாலும் இறைமறுப்பு ஆக்கிரமிப்பாளர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு குஃப்ர் ஆட்சியமைப்பு முறை அமல்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் விட்டுச்சென்ற அவருடைய மரபு முடிவுக்கு வந்த தினம். நபி (ஸல்) அவர்களை பின்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்த ஆட்சி தலைமை இல்லாமல் போன தினம்.

அதிர்ச்சிகரமான இந்த நிகழ்வு இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம் உம்மத்தின் மீதும் விவரிக்க முடியாத எண்ணற்ற தாக்கங்களை ஏற்படுத்திவிட்டது. உலக மக்களுக்கு நேர்வழி என்னும் ஒளியையும் அவ்வொளியை எடுத்துச்செல்வதற்கு தேவையான வலிமையையும் பெற்றிருந்த இஸ்லாமிய சமூகம் இன்று இருளிலும் பலஹீனத்திலும் சென்றுவிட்டது.

உம்மாவின் இப்பிரச்சனை குறித்து நாம் கவனக்குறைவாக இருப்பது என்பது கிலாஃபாவின் மறைவால் அனுதினமும் துன்பத்துக்குள்ளாகி கொண்டிருக்கும் உம்மத்தை அலட்சியம் செய்யும் செயல் என்பதோடல்லாமல் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உன்னத மரபையும் அந்த மரபை தங்களின் உடலாலும் உயிராலும் 13 நூற்றாண்டுகள் கட்டிக்காத்தவர்களையும் உதாசீனப்படுத்தும் செயல் என்பதும் வெளிப்படையான உண்மை.

மிராஜ் பயணம் எப்போது நிகழ்ந்தது என்பதில் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றபோதிலும், உலகளாவிய முஸ்லீம் உம்மத் ரஜப் 27ஐ தான் மிராஜ் நிகழ்ந்த தினமாக நினைவுகூருகிறது. மேலான அல்லாஹ்வின் (சுபு) நாட்டத்தின் காரணமாகவே இஸ்லாமிய வரலாற்றின் இந்த முக்கிய இரண்டு நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன. முதல் நாளில் நிம்மதி, வெற்றி மற்றும் அதிகாரம்; அதற்கு அடுத்த நாளிலேயே குழப்பம், வீழ்ச்சி மற்றும் பலஹீனம்.

அல்லாஹ்வின் (சுபு) இந்த ஏற்பாடு நமக்கு எதனை குறிப்பிடுவது போல் இருக்கிறதென்றால் நிம்மதி-குழப்பம், வெற்றி-தோல்வி, அதிகாரம்-பலஹீனம் ஆகிய இவற்றிற்கு மத்தியிலான வித்தியாசம் ஒரு மெல்லிய கோடு போன்றது தான். அந்த மெல்லிய கோடாக தன்னுடைய மார்க்கத்தையும் அதை உறுதியாக பற்றிப்பிடித்து நடப்பவர்களுக்கு வெற்றியையும் இன்னும் அதனை அலட்சியப்படுத்தி கைவிடுபவர்களுக்கு தோல்வியையும் தீர்மானித்துள்ளான். அல்லாஹ்வால் (சுபு) நபி (ஸல்) அவர்களுக்கு மிராஜ் பயணத்தில் வெகுமதியாக்கபட்ட இந்த நிம்மதி, வெற்றி மற்றும் அதிகாரம் என்பது இன்று துன்பத்தில் வாடிக்கொண்டிருக்கும் நமக்கு சாத்தியமற்ற ஒன்றோ அல்லது மிகவும் தொலைவில் உள்ள ஒன்றோ அல்ல – எனினும் அதற்கென்று ஒரு விலை உள்ளது. அதனை நாம் அடைந்து கொள்ள வேண்டுமென்றால் நபி (ஸல்) அவர்கள் இந்த பணிக்காக செய்த தியாகத்தை போன்ற தியாகத்தையும் இஸ்லாமை இவ்வுலகில் நிறுவுவதற்காக அவர்கள் (ஸல்) செய்த உழைப்பை போன்ற உழைப்பை செய்தால், இதற்கு முன்னர் இஸ்லாம் எப்படி உலகை வெற்றிகொண்டு உலகின் தலைசிறந்த மார்க்கமாக விளங்கியதோ அதை போன்ற ஒரு வெற்றியையும் அதற்கு தேவையான உதவியையும் தந்து அல்லாஹ் (சுபு) இந்த உம்மத்தையும் மேலோங்கச்செய்வான் இன்ஷா அல்லாஹ்!

Comments are closed.