சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

முஹம்மது பின் சல்மானுடைய பிரித்தானிய, அமெரிக்க மற்றும் பிரான்சு விஜயம்

கேள்வி:

சவூதியின் பட்டத்து இளவரசர், முஹம்மது பின் சல்மான் 09/04/2018 திங்களன்று தொடங்கிய தனது இரண்டு நாட்களுக்கான பிரான்சு விஜயத்தை 10/04/2018 அன்று முடித்துக் கொண்டார். இதற்கு முன்பு அவர் மூன்று நாட்கள் விஜயமாக 10/03/2018 அன்று பிரிட்டனுக்கும் சென்றார். அதை தொடர்ந்து 20/03/2018 முதல் 08/04/2018 வரை அமெரிக்காவுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்… ஒரு நாட்டின் தலைவரை வரவேற்கும் அளவுக்கு அவர் வரவேற்கப்பட்டார். ஆக இந்த விஜயங்களுக்கு பின்னணியில் இருப்பது என்ன? இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் வெவ்வேறு நலன்களை கொண்டிருக்கும் தரப்பினரிடத்தில் இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது; இவர்களுக்கு இடையில் இருக்கும் பொதுவான விஷயம் என்ன? தயவுசெய்து இந்த விஷயத்தை தெளிவுபடுத்துங்கள், அல்லாஹ் (சுபு) உங்களுக்கு நன்மையை கொண்டு கிருபை செய்வானாக.

பதில்:

முஹம்மது பின் சல்மான் (எம்பிஎஸ்) மேற்கொண்ட விஜயங்களில் மிகமுக்கியமானது அமெரிக்காவின் விஜயமாகும். பிரிட்டனுக்கான அவருடைய விஜயமானது சவூதி அரேபியாவில் அதனுடைய கைப்பாவைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள காரணத்தால் அதை ஆறுதல் படுத்துவதற்கான விஜயமாகும். அதனோடு சேர்த்து பிரான்சுக்கான அவருடைய விஜயமானது அங்கு தன்னை பிரபலப்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான பயணமாகும், இங்ஙனம் முஹம்மது பின் சல்மான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது; அதன் விவரங்களை கீழே பார்ப்போம்:

முதலாவதாக: முஹம்மது பின் சல்மானின் பிரித்தானிய விஜயம்

முஹம்மது பின் சல்மானுடைய பிரித்தானிய விஜயம் 07/03/2018 அன்று தொடங்கி 10/03/2018 வரை மூன்று நாட்கள் நீடித்திருந்தது. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை போன்று பிரிட்டனை ஆறுதல் படுத்துவதற்கான ஒரு விஜயமாக இது இருந்தது, ஏனெனில் சவூதி ராஜ குடும்பத்தில் பிரிட்டன் ஆழமாக வேறூன்றியிருப்பதையும் அதன் காரணமாக அது அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் எம்பிஎஸ் நன்கறிவார். ஆகவே அவர் பிரிட்டனுக்கு பெருமளவில் இல்லையென்றாலும் சில பொருளாதார ஒப்பந்தங்களை அதனிடம் முன்வைத்து அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக வேண்டி விஜயம் செய்தார்.

இந்த விஷயமானது அவர்களுடைய இறுதி அறிக்கையின் மூலம் ஊர்ஜிதமானது. இந்த விஜயம் சில பொருளாதார சலுகைகளை தவிர, சில குறிப்பிடப்படாத வார்த்தைகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ஒப்பந்தங்களை கொண்ட ஒரு சாதாரண பயணத்தை போன்றானது தான். உதாரணத்திற்கு, அவர்களுடைய இறுதி அறிக்கை கூறுவதாவது:

அ) வழக்கமாக வெளியிடப்படும் இறுதி அறிக்கைகளில் இருக்கும் சில பொதுவான விஷயங்கள்:

சவூதியின் 2030 இலக்கிற்கும் சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தில் பலவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கு பிரிட்டன் தனது வலுவான ஆதரவை உறுதி செய்துள்ளது.

– பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானும் பிரித்தானிய பிரதம மந்திரி தெரேசா மேவும் இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்களையும் பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் முறையாக நடைபெறுவதற்கான முக்கிய பொறிமுறையாக விளங்கும் வருடாந்திர மூலோபாய கூட்டணி மன்றத்தை புதனன்று தொடங்கி வைத்தனர்… மழலையர், ஆரம்ப, இரண்டாம் மற்றும் உயர்நிலை கல்வியில் பிரிட்டன் கொண்டுள்ள அனுபவத்தையும் அது மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளையும் தொழில்முறை பயிற்சி திறனில் அது கொண்டுள்ள மேன்மையையும் சவூதி அரேபியா பாராட்டுகிறது… சுகாதாரத்துறையில் பிரிட்டன் கொண்டுள்ள அனுபவத்தை சவூதி அரேபியா நன்கறியும்… சவூதி அரேபியாவின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாக சவூதி அராம்கோவை வெற்றிகரமாக பங்கு சந்தையில் வெளியிடுவதன் முக்கியத்துவம் குறித்தும் பிரிட்டன் கூறியது… மேலும் சவூதி அரேபியா உலகளாவிய நிதி மையமாக விளங்க வேண்டும் என்று லண்டன் கொண்டிருக்கும் நிலைக்கு ஆதரவு தெரிவித்தது…

லண்டன் பங்குத்சந்தை குழமம் சவூதி பங்குச்சந்தை(ததவ்வுல்)யுடன் பங்குச்சந்தை உருவாக்கத்திற்கு உதவும் வகையிலான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஒத்துக்கொண்டுள்ளது. சவூதி அரேபியாவும் இங்கிலாந்தும் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு உறவின் முக்கியத்துவத்துவம் குறித்தும் இருநாடுகளிலும் பொதுவாக தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதில் அவை ஆற்றும் பங்கு குறித்தும் வலியுறுத்தின. இருநாடுகளும் தங்களுக்கிடையே செய்திகளை பரிமாறிக்கொண்டும் பாதிப்படையக்கூடிய அளவில் இருக்கும் குழுக்கள் மீது தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் செல்வாக்கை அடையும் வழிமுறைகளை புரிந்து கொண்டு தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான முயற்சியில் கவனம் செலுத்த எண்ணம் கொண்டிருப்பதாக அறிவித்தன. இருநாடுகளும் தங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும் கூட்டணியையும் ஆழப்படுத்திக் கொள்ள பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அவற்றில் சவூதிக்கு கூடுதலாக 48 டைஃபூன் ரக போர்விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்வதற்கு இருதரப்பினரும் ஆர்வம் கொண்டுள்ளதாக அறிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதும் அடங்கும். ஒரு சிறந்த நட்புணர்வு மற்றும் மற்ற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையீடு செய்யாத வகையிலான நற்பண்புகளை ஈரான் கடைபிடக்க வேண்டிய அவசியம் குறித்தும் இரு நாடுகளும் வலியுறுத்தின.

ஆ) பொதுவான, கவனம் செலுத்தப்படாத அல்லது பிரச்சனைகளுக்கான விரிவான தீர்வு சம்மந்தமான குறிப்பிடத்தக்க சில அரசியல் மற்றும் பாதுகாப்பு விஷயங்களானவை:

– யமன் பிரச்சனைக்கு ஜிசிசியின் முயற்சி மற்றும் அதனை நடைமுறைபடுத்தும் பொறிமுறையின் அடிப்படையிலும் மற்றும் யமனுடைய தேசிய அளவிலான பேச்சுவார்த்தையின் முடிவு மற்றும் பாதுகாப்பு சபை தீர்மாணம் 2216ன் அடிப்படையிலுமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும், அது அரசியல் தீர்வு ஒன்றை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் யமனுடைய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் என்பதை இரு நாடுகளும் வலியுறுத்தின. இரு தரப்பும் புதியதாக யமனுக்கு ஐநாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்ட மார்ட்டின் கிரிஃபித்துக்கு தங்களது பலமான ஆதரவை வெளிப்படுத்தின… மனிதாபமான உதவிகளை தங்குதடையில்லாமல் அனுமதிப்பதற்கு ஹவுத்தீ போராளிக்குழுவினர் மீது சர்வதேச சமூகம் அழுத்தம் தர வேண்டிய முக்கியத்துவத்தில் அவர்கள் ஒப்புக்கொண்டனர்… சர்வதேச மனிதாபிய சட்டத்திற்கு உட்பட்டு தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதில் சவூதி தொடர்ந்து உறுதிபூண்டிருப்பது குறித்து இங்கிலாந்து வரவேற்றது… அரபு சமாதான முயற்சி மற்றும் அது தொடர்பான ஐநா தீர்மானங்களின் அடிப்படையில் இரு நாட்டு உருவாக்கம் எனும் தீர்வில் தங்களது உறுதிபாட்டை இரு நாடுகளும் மீண்டும் வலியுறுத்தின.

இ) பிரித்தானிய ஆதரவாளர்களுக்கு எதிரான பின் சல்மானுடைய நடவடிக்கைகளுக்கு ஆறுதல் படுத்தும் நோக்கிலான சில பொருளாதார ஒப்பந்தங்கள்:

– 2030 இலக்கை நிறைவேற்றுவதற்கு உதவும் வகையில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொது முதலீட்டு நிதி மூலமாக இங்கிலாந்துடன் (மற்றும் அதன் மூலமாக) பரஸ்பர முதலீடு மேற்கொள்ளுதல் மற்றும் வாய்ப்புகளை மதிப்பீடு செய்வது உட்பட பலதரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய ஒரு நீண்டகால கூட்டுறவை மேற்கொள்வதற்கு சவூதியும் இங்கிலாந்தும் உறுதிபூண்டன… நேரடி முதலீடாக $30 பில்லியனை சேர்த்து பொது முதலீட்டு நிதி (பிஐஎஃப்) என இவையனைத்து வாய்ப்புகளும் ஒன்று சேர்ந்து 10 வருட காலத்தில் $100 பில்லியன் மதிப்புகளை கொண்டது.

– இந்த விஜயத்தின் போது அதிக அளவிலான பெரும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இங்கிலாந்தும் சவூதி அரேபியாவும் வரவேற்றன; இது $2பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் சவூதி அரேபியாவிலும் இங்கிலாந்திலும் வளமையை பெருக்கும் என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயமானது அதன் நோக்கத்தை மீறி அதாவது ஆறுதல் மற்றும் அமைதி படுத்துதல் இவற்றை மீறி செல்லவில்லை என்பது இவ்வனைத்து அறிவிப்புகளின் மூலம் தெளிவாகிறது, இந்த சந்திப்பில் பெரும்பான்மையாக நடந்தது என்னவென்றால் சில பொருளாதார வாக்குறுதிகளை தவிர பொதுவான வார்த்தை பரிமாற்றம் தான், அதுவும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை எந்தவித முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.

இரண்டாவதாக: முஹம்மது பின் சல்மானின் அமெரிக்க விஜயம்

எம்பிஎஸ்ஸின் அமெரிக்க விஜயத்தை பின்தொடர்பவர் அமெரிக்கா எம்பிஎஸ்ஸை தனக்கு கட்டுபடும் அடியானாக உருவாக்கி வருவதை அறிவார்; அது அவரை நேரடியாக அவமானப்படுத்துகிறது ஆனால் அவர் அதை கண்டு புன்னகைக்கிறார் மேலும் அது அவரை மிரட்டுகிறது அதற்கு அவர் சரண்டைகிறார்; அதற்கான விளக்கத்தை கீழே பார்ப்போம்:

1) தனது சகோதரர் அப்துல்லாஹ் 23/1/2015 அன்று மரணித்த பிறகு ஆட்சியை பிடித்த மன்னர் சல்மான் உடனடியாக தனது ஆட்சியை நிறுவுவதற்கான மற்றும் தனக்கு பின் ஆட்சி செய்பவர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டார். அவர் பிரிட்டனுக்கு விசுவாசமாக இருக்கும் தனது சகோதரர் முர்கின் பின் அப்துல் அஜீஸை பட்டத்து இளவரசர் பதவியிலிருந்து நீக்கி தனது மகன் முஹம்மது பின் சல்மானை பட்டத்து இளவரசராக நியமித்தார், மேலும் அவருடைய அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் பல அதிகாரங்களை அவருக்கு வழங்கினார். அவர் தனது குடும்பத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக இருக்கும் அவருடைய பல போட்டியாளர்களை நீக்கியும் ஓரம்கட்டியும் அமெரிக்காவுக்கு தனது அதீதமான விசுவாசத்தை வெளிக்காட்டினார். இரண்டாவது நடவடிக்கையாக அமெரிக்கர்கள் எம்பிஎஸ்ஸின் ஆற்றல்களை தெரிந்து கொள்ளவும் அவரை பற்றி நன்கறிந்து கொள்ளவும் அமெரிக்காவின் மீதான அவருடைய விசுவாசத்தை சோதிப்பதற்காகவும் அவருடன் அமெரிக்கர்களை நெருக்கமாக கொண்டு சேர்த்தார். அதனடிப்படையில் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பிறகு 15/3/2017 அன்று அவர் வாஷிங்டனுக்கு விஜயம் புரிந்தார், வெள்ளைமாளிகையில் டிரம்ப் தனது துனை ஜனாதிபதி பென்ஸ், மற்றும் அவருடைய தேசிய பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் அவருக்கு உச்சகட்ட நிலையில் வரவேற்றார். முஹம்மது பின் சல்மானுக்கு தனது ஆதரவை டிரம்ப் தெரிவித்தார். மற்றொரு நடவடிக்கையானது 4/11/2017 அன்று நிகழ்பெற்றது அச்சமயம் எம்பிஎஸ்ஸின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் பிரித்தானிய கைப்பாவைகள் மற்றும் இன்னும் சிலரின் சிறகுகளை கத்தரித்து அனைவரையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை அவமானப்படுத்தியும் அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கி வடுவதாக மிரட்டி நூற்றுக்கணக்கான இளவரசர்கள், மந்திரிகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எனும் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து $100 பில்லியன் டாலர்களை கைப்பற்றியதாக அவர் அறிவித்தார்.

மேலும் இப்போது, உச்சகட்ட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது; வாஷிங்டனுக்கு அவருடைய இரண்டாவது விஜயம் அமெரிக்காவின் மீதான தனது விசுவாசத்தை பலப்படுத்தவும் அதனுடனான உறவை பலப்படுத்திக் கொள்ளவும் வெகுவிரைவில் அவர்கள் எதிர்நோக்கும் சமயத்தில் அவரை நிஜத்தில் மன்னராக ஆக்குவதற்கான இறுதி நடவடிக்கைக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவதற்காக அமைந்தது. பின் சல்மான் தன்னுடைய அயல்நாட்டு பயணங்களை மேற்கொள்ள தொடங்கியதிலிருந்து ஒரு மன்னராகவே அவர் வரவேற்கப்பட்டார், அவ்வாறே 4/3/2018ல் எகிப்தில் நிகழ்ந்தது, மேலும் 7/3/2018 அன்று அவர் பிரிட்டனுக்கு விஜயம் செய்த போது ராணியால் வரவேற்கப்பட்டார் அதன்பிறகு அமெரக்காவில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும் அவர் மேற்கொண்ட நீண்ட பயணமும் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. பின் சல்மானுடன் டிரம்ப் உரையாற்றும் போது இதுபற்றி “கடந்த முறை தாங்கள் வெள்ளைமாளிகைக்கு வருகை புரிந்ததற்கு பிறகு சில அற்புதமான விஷயங்கள் நடைபெற்றுள்ளன”. கடந்த விஜயத்தின் போது “தாங்கள் பட்டத்து இளவரசராக இருந்தீர்கள்” ஆனால் இப்போதோ “பட்டத்து இளவரசர் என்பதை தாண்டிய நிலையில் இருக்கிறீர்கள்” என குறிப்பிட்டார். (ரஷ்ய ஸ்புட்னிக் 21/3/2018)

2) ஆக பின் சல்மான் வாஷிங்டனை சென்றடைந்தவுடன் 20/3/2018 அன்று டிரம்ப்பை சந்தித்தார். டிரம்ப் “பட்டத்து இளவரசரை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம், சவூதி அரேபியா எப்போதும் சிறந்ததொரு நண்பனாக விளங்கி வருகிறது …மே மாதம் நான் சவூதி அரேபியாவில் இருந்தேன். மேலும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை நாம் அமெரிக்காவுக்கு திரும்ப கொண்டு வரப்போகிறோம்… மேலும் நான் பெருமிதம் கொள்ளும் மற்றொரு விஷயம் என்னவெனில் 400 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய முதலீடு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டது தான்” எனக் கூறினார், மேலும் தொடர்ந்து அவர் “நாம் ஒருவரை ஒருவர் புரிந்துள்ளோம். சவூதி அரேபியா ஒரு வளமான தேசம், மேலும் அவர்கள் கொண்டுள்ள வளத்தில் சிறு பகுதியை வேலைவாய்ப்பின் மூலமாகவோ, உலகிலேயே சிறப்பு வாய்ந்து இராணுவ தளவாடங்களை நம்மிடமிருந்து கொள்முதல் செய்வதன் மூலமாகவோ நமக்கு அவர்கள் தருவார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

அதற்கு பின் சல்மான்: “சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவுகள், அது பழமை வாய்ந்தது… அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உட்பட பலதரப்பட்ட ஏராளமான விஷயங்களில் – 80 வருடங்களுக்கும் மேலான கூட்டுறவையும் மற்றும் பெரும் நலன்களை கொண்டதாகும்… மேலும் இந்த உறவுகளுக்கான அடித்தளமானது உண்மையில் மிகவும் பெரியதும் ஆழமானதும் ஆகும்… அடுத்த நான்கு ஆண்டுகளில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டோம், ஆனால் அது 400 பில்லியன் டாலர்கள் அளவிலான வாய்ப்புகளை ளற்படுத்துவதில் முடிவுற்றுள்ளது” என பதிலளித்தார். (சிஎன்என் 20/3/2018).

அமெரிக்கா சவூதி அரேபியாவை மிரட்டி வருகிறது மேலும் முஸ்லிம்களுடைய சொத்துக்களை நம்பிக்கை துரோகம் செய்து உம்மத்திற்கு துரோகம் இழைத்து வரும் ஆட்சியாளர்கள் மூலம் சுரண்டி வருகிறது. டிரம்ப்புக்கும் அமெரிக்காவுக்கும் வேண்டியது என்னவென்றால் தங்களுடைய விசுவாசமும் தோழமையும் குஃப்பார்களுடன் தான் என்று பிரகடனப்படுத்தி மேலும் மத்திய கிழக்கில் அந்த குஃப்பார்களுடைய நலன்களை பாதுகாப்பதற்காக சேவை புரிந்து, மேலும் அவர்களுடைய பொருளாதாரத்திற்கு நிதியை அளித்து அவர்களுடைய நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து செலவுகளுக்கும் நிதியை அளித்து வரும் சவூது குடும்பத்தின் மூலமாக முஸ்லிம்களுடைய பணத்தை உறிஞ்சுவது தான்.

3) அமெரிக்காவிடமிருந்து சவூதி அரேபியா கொள்முதல் செய்து விரைவில் அங்கு அனுப்பப்படும் ஆயுதங்களின் வரைபடங்கள் மற்றும் சித்தரங்களை கொண்ட பதாகையை பின் சல்மானின் நெஞ்சுக்கு அருகே வைத்து பத்திரிக்கையாளர்களிடம் டிரம்ப் காட்சி படுத்தினார். அவர் “இது உங்களுக்கு வேர்கடலையை போன்றது” என்று கூறி பில்லியன் கணக்கிலான மதிப்பை கொண்ட ஆயுதங்களின் வகைகளையும் ஒப்பந்தங்களின் எண்ணிக்கையையும் அடுக்கிக் கூறினார், டிரம்ப்: “இந்த ஒப்பந்தங்கள் புதிய வேலைவாய்ப்புகளை (அமெரிக்காவில்) உருவாக்கும் என்றும் அதன் மூலம் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாக” கூறினார். (ஸ்புட்னிக் 21/3/2018) அவர் செய்ய வேண்டியதில் மீதம் இருப்பது என்னவென்றால் நீங்கள் வழங்கும் பணத்திற்காகவும் உங்களுடைய நிலங்களை எங்களுடைய உபயோகத்திற்காக மாற்றுவதற்காகவும், நாங்கள் கேட்கும் அனைத்தையும் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் செய்து கொடுப்பதற்கு பகரமாக எங்களுடைய உதவி உங்களுக்கு உண்டு என்று உணர்த்தும் விதமாக பின் சல்மானுடைய கழுத்தில் ஒரு அட்டையை தொங்கவிடுவது தான். மூர்க்கத்தனமாகவும் அலட்சியப்போக்குடனும் நடந்து கொண்ட டிரம்ப்புக்கு முன் ஒரு முட்டாளை போன்று புன்னகைத்த பின் சல்மானுக்கு இது அவமானகரமானதாகும்.

4) எம்பிஎஸ்ஸின் விஜயத்தின் போது, அவர் நிர்வாகத்தை சார்ந்த மற்றும் இதர முக்கிய பிரிவுகளின் பல அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்டார்:

அ) அவர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் மற்றும் போர்ப்படை தளபதி டேன்ஃபோர்டு ஆகியோரை சந்தித்து அமெரிக்காவுக்கான தனது விசுவாசம் குறித்து உறுதியளித்தார்: “இன்றைய சவால்களை நமது இரு தேசங்களும் எதிர்கொள்வது முதல் முறையானது கிடையாது. ஈரானிய அரசின் செயல்பாடுகளாக இருக்கட்டும் அல்லது தீவிரவாத இயக்கங்கள் தொடுக்கும் சவால்களாக இருக்கட்டும் இன்று இந்த பிராந்தியத்திலும் உலகளாவிய அளவிலும் தீவிரமான சவால்களை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறோம்” என அவர் கூறினார். (அல்-வி’ஆம் சவூதி செய்தித்தாள் 24/3/2018). “நாம் யமனுடைய உள்நாட்டு போருக்கு அமைதியான முறையில் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும், இந்த விஷயத்திற்கு நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்”, என பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானிடம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் கூறினார். “நாம் இந்த போரை யமனுடைய மக்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் முடித்து வைப்போம், இதுதான் முடிவானது”, மேலும் அவர் “ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும்” வலுப்படுத்த ரியாதுடன் இணைந்து செயல்படுவோம் என்று உறுதியளித்தார் (ராய்டர்ஸ், 22/3/2018). யமனுடைய பிரச்சனையை பொறுத்தவரையில் அமெரிக்கா தனது இறுதி இலக்கை இன்னும் அடையவில்லை, மேலும், அமெரிக்காவின் நோக்கத்தை அடைவதற்காக வேண்டி செயல்படும் சவூதி அரேபியாவோ, இன்னமும் நெருக்கடியான நிலையில் தான் இருந்து வருகிறது மேலும் இதிலிருந்து அதனால் வெளியேற முடியாமலும் இருக்கின்றது. இந்த பிரச்சனையின் முடிவும் சவூதி அரேபியா இதிலிருந்து பத்திரமாக வெளியேறுவதும் பின் சல்மானுடைய அதிகாரத்தை வலுப்பெறச் செய்யும்.

ஆ) அவர் பல செய்தித்தாள்களின் நிருபர்களை சந்தித்து அமெரிக்காவின் மீது தான் கொண்டுள்ள வலுவான பற்றுதலை வெளிக்காட்டும் வகையிலான சொற்றொடர்களை பயன்படுத்தி கூறினார்:

– பின் சல்மான் டைம்ஸ் நாளிதழுக்கு 31/3/2018 அன்று அறிவித்த அறிக்கையில்: “நீண்ட காலத்திற்கு இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது அமெரிக்க படைகள் நீடித்தருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம்… பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அழுத்தம் தருவதற்கும் அமெரிக்கா தன்னிடம் துருப்பு சீட்டு ஒன்றை கொண்டிருக்க வேண்டும். இந்த படைகளை நீங்கள் வெளியேற்றி விட்டால், இந்த துருப்புச் சீட்டை நீங்கள் இழந்துவிடுவீர்கள்”… ” பஷார் இன்னும் நிலைத்திருக்கிறார்,” என அவர் கூறினார். “ஆனால் ஈரான் தான் நாடுவதை எல்லாம் செய்வதை விட்டு தடுப்பதே பஷாரின் நலனாகும் என நான் நம்புகிறேன்.” அமெரிக்க அதிபர் 3/4/2018 செவ்வாயன்று: “நான் (சிரியாவை விட்டு) வெளியேற நாடுகிறேன். நான் நமது படைகளை திரும்ப நமது தேசத்திற்கு கொண்டுவர நாடுகிறேன். நான் நமது தேசத்தை மறுகட்டமைப்பு செய்ய நாடுகிறேன்.” எனக் கூறினார்.

“சிரியாவை பொறுத்தவரை, நமது முதன்மையான நோக்கமான ஐஎஸ்ஐஎஸ்ஸை வெளியேற்றுவதை பொறுத்தவரை அந்த காரியத்தை அநேகமாக நாம் செய்து முடித்து விட்டோம். மேலும் இந்த விஷயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மற்றவர்களுடைய ஒருங்கிணைப்புடன் கூடிய விரைவில் ஒரு முடிவை எடுப்போம். நமது முடிவில் சவூதி அரேபியா மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது. மேலும் நான் கூறினேன், சரி, நாங்கள் இருக்க வேண்டும் என நீங்கள் விருப்பப்படுகிறீர்கள், அதற்காக நீங்கள் பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.” (ஏ.எஃப.பி, 3/4/2018). இவ்வாறு, டிரம்ப் இந்த பகுதியில் அமெரிக்க ஆதிக்கத்தை தக்கவைக்க விரும்பும் அல் சவூது அரசை மிரட்டும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

மேலும் அவரிடம் 2/4/2018 அன்று “தாங்கள் யூத மக்கள் தங்களுடைய முன்னோர்களுடைய இடத்தில் தங்களுக்கு என ஒரு தேசத்தை அமைத்துக் கொள்வதற்கு உரிமை பெற்றிருக்கிறார்களா? என்று அட்லாண்டிக் இதழ் கேள்வி எழுப்பியதற்கு அவர் அளித்த பதிலாவது:

“ஒவ்வொருவருக்கும், எந்தவொரு இடத்திலும், அவர்களுடைய அமைதியான தேசத்தில் வாழும் உரிமை இருப்பதாக நான் நினைக்கிறேன்… பாலஸ்தீனர்களும் இஸ்ரவேலர்களும் அமைதி நிறைந்த அவர்களுடைய சொந்தமான நிலப்பரப்பில் வாழ்வதற்கான உரிமையை கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்”. (அல் வி’ஆம் சவூதி இணையதளம் 3/4/2018)

இதன்மூலம் பின் சல்மான் இஸ்ரா மற்றும் மிஃராஜ் நடந்த இடமான புனித பூமிக்கு எதிராக தான் துரோகம் இழைப்பதையும் மறைக்கவில்லை.

– மேலும் பொழுதுபோக்கு எனும் பெயரில், பெரும் நிதியை ஒதுக்கியுள்ளார். சவூதி அரேபிய அரசின் பொழுதுபோக்கு துறையின் தலைவர், அஹமது பின் அகீல் அல் கதீப் ” அடுத்த பத்து ஆண்டுகளில் 64 பில்லியன் டாலர்களுக்கு நிகரான 240 பில்லியன் ரியால்களை பொழுதுபோக்கு துறையில் முதலீடு செய்வதற்கு அரசு எண்ணம் கொண்டுள்ளது” என அறிவித்தார். (சவூதி அல் அரேபியா வளைத்தளம் 22/2/2018).

– வாஷிங்டனுக்கு அதன் அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான அவருடைய விஜயத்தின் நான்காவதும் இறுதி நாளுமான 24/3/2018 அன்று வாஷிங்டன் போஸ்ட் பின் சல்மானுடன் ஒரு பேட்டி எடுத்தது, அதில் அவர் “அந்த சந்திப்பின் போது யமனுடைய போர், மத்திய கிழக்கு அமைதி முயற்சி, ஈரான், உள்நாட்டு சீரமைப்பு முயற்சி மற்றும் சவூதியின் அணுசக்தி உற்பத்தி செய்வதற்கான ஆர்வம் கொண்டிருப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது” என கூறினார். சவூதி அரேபியாவின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவிபுரியும் வண்ணமாக அமெரிக்க முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதோடு தொழில்நுட்ப மற்றும் கல்வித்துறையில் உதவியை பெறுவதே அமெரிக்காவில் தனது முக்கியமான காரியமாகும் எனக் கூறினார். அவர் இந்த செய்தித்தாளிடம் பெண்களுக்கு அவர்களுடைய பல உரிமைகளை வழங்குவது குறித்தும் கூறினார்… இவையனைத்தையும் வைத்து பார்க்கையில் இந்த பிராந்தியத்தின் அனைத்து கோப்புகளும் இவர் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது. இதன்மூலம் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும் அதன் விஷயத்தில் அமெரிக்கர்களுடன் இணைந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியளிக்க விரைவது குறித்து உணர்ந்தவராக இருப்பார். யமனுடைய விஷயத்திற்கு அப்பாற்பட்டு மத்திய கிழக்கில் டிரம்ப்புடைய திட்டம் மற்றும் பாலஸ்தீன பிரச்சனைக்கான தீர்வு ஆகியவையும் உள்ளன; அவர் (டிரம்ப்) 6/21/2017 அன்று ஜெரூசலேத்தை யூத தேசத்தின் தலைநகராக அங்கீகரித்த நிலையில் அதற்கான திட்டங்களை சில மாதங்களில் அறிவிக்கப்போவதாக கூறினார். மேலும் அவர் (பின் சல்மான்) சமாதானப்படுத்த முயலும் இந்த யூத அரசுக்கு மாறாக ஈரானை எதிரியாக ஆக்கும் விஷயம், மற்றும் அமெரிக்காவின் நாட்டத்திற்கு ஏற்றார் போல் உள்நாட்டு கொள்கைகளை மாற்றுவது அதாவது தேசத்தை மதசார்பின்மையாக்குவது மற்றும் அதனுள் மேற்கத்திய நாகரீகத்தை உட்புகுத்துவது அதுபோல நாட்டின் பொருளாதாரத்தில் முழுமையான கட்டுபாட்டை கொண்டிருக்கும் வகையிலான வாய்ப்புகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி தருவது போன்றவையாகும்.

29/3/2018 அன்று அரபிக் 21 எனும் வளைத்தளம், பிரிட்டனுடைய இண்டிபெண்டண்ட் செய்தித்தாள் அமெரிக்க வெகுஜனங்களிடம் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக வேண்டி பெரு நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசியல்வாதிகள், எண்ணை வியாபாரிகள் மற்றும் தொழில்நுட்பத் துறை, கேளிக்கை மற்றும் கலைத்துறையில் பணிபுரிபவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டது உட்பட முஹம்மது பின் சல்மானுடைய நிகழ்ச்சிகளை கண்டு களித்ததை கூறியதாக கேட்டு செய்தி வெளியிட்டது. சிபிஎஸ் தொலைக்காட்சி நிலையம் “60 மினிட்ஸ்” எனும் நிகழ்ச்சிக்காக அவருடன் பேட்டி ஒன்றை எடுத்தது, இது பல தசாப்தங்களில் முதல்முறையாக சவூதியின் தலைவர் ஒருவருடன் எடுக்கப்பட்ட பேட்டியாகும். மத காவலாளிகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது மற்றும் பெண்களை வாகனங்கள் இயக்க அனுமதித்தது போன்ற தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் தைரியமான ஒரு இளம் சீர்திருத்தவாதியாக தனது தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். கிஸ்ஸிங்கர், பின் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் மற்றும் பல முன்னாள் அதிகாரிகளையும், பல பெரும் பத்திரிக்கை முதலாளிகளை சந்தித்ததாகவும் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் அயலுறவு செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் டேவிட் பெட்ரோஸ் ஆகியோரை சந்திக்கவிருப்பதாகவும் செவ்வாயன்று (27/3/2018) இந்த செய்தித்தாள் குறிப்பிட்டது.

– அவர் அமெரிக்காவிலிருந்து பிரான்சுக்கு செல்லும்போது டிரம்ப்புடைய அமெரிக்காவுக்கு தனது விசுவாசத்தை குறிக்கும் விதமாக அனுப்பிய செய்திமடல் ஒன்றில் அதிகப்படியான தாழ்மையும் கீழ்படுதலும் தென்பட்டது, அதில் அவர் கூறியதாவது: “மகத்துவம் மிக்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்: எமது தோழமையான உங்களுடைய தேசத்திலருந்து விடைபெறும் இத்தருணத்தில் எனக்கும் என்னுடன் துணை வந்த எனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்காக எனது நன்றியை உங்களுக்கு உரித்தாக்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன், மேலும் இந்த வாய்ப்பினை அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை கண்டு வரும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று மற்றும் மூலோபாய உறவுகளுக்கு சமர்ப்பிக்க மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி கொள்கிறேன், மேலும் இந்த பயணத்தின் போது நிகழ்பெற்ற பேச்சுவார்த்தைகள் இந்த உறவுகளை ஆழப்படுத்துவதற்கு உதவிபுரியும் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது மேலும் இதை வலுப்படுத்துவதற்காகவும், பரஸ்பர ஒத்துழைப்பில் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும்,… உங்களுக்கு ஆரோக்யத்தையும் இன்பத்தையும் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் செழிப்பையும் அடைவதற்கு வாழ்த்து தெரிவக்கிறேன்”

இந்த விஜயம் குறித்தான விளக்கத்தை நாம் ஆரம்பத்தில் கூறியதை வைத்து மீண்டும் முடித்து வைக்கிறோம். (எம்பிஎஸ்ஸின் அமெரிக்க விஜயத்தை பின்தொடர்பவர் அமெரிக்கா எம்பிஎஸ்ஸை தனக்கு கட்டுபடும் அடியானாக உருவாக்கி வருவதை அறிவார்; அது அவரை நேரடியாக அவமானப்படுத்துகிறது ஆனால் அவர் அதை கண்டு புன்னகைக்கிறார் மேலும் அது அவரை மிரட்டுகிறது அதற்கு அவர் சரண்டைகிறார்).

மூன்றாவதாக: முஹம்மது பின் சல்மானுடைய பிரான்ஸ் விஜயம்

1) பின் சல்மானுடைய பிரான்ஸ் விஜயமானது தனக்கு புகழை பெற்றுத்தருவதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக வேண்டி மேற்கொள்ளப்பட்டதாகும், இதற்காக வேண்டியே அவர் பிரிட்டனிலிருந்து அமெரிக்காவுக்கும் அதனை தொடர்ந்து ஐரோப்பாவுக்கும் (பிரான்ஸ்) பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாத காரணத்தால் சர்வதேச பயணங்களின் போது வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்ற இராஜாங்க வழிமுறைகள் கூட கடைபிடிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு, “பிரஞ்சு பிரதம மந்திரியின் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் திங்களன்று தொழில்நுட்பத்தில் சவூதி-பிரஞ்சின் ஆழமான உறவின் சிறப்பம்சத்தை விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வளர்ந்து வரும் நிறுவனங்களின் பெருங்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதை சவூதி பட்டத்து இளவரசர் ரத்து செய்ததாக கூறினார். LA ட்ரிப்யூன்: குறிப்பாக பின் சல்மான் கடந்த வாரம் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழில்நுட்ப பெரும்புள்ளிகளை சந்தித்திருந்த வேளையில் பட்டத்து இளவரசரின் “ஸ்டேஷன் எஃப்”க்கான பயணத்தை ரத்து செய்தது என்பது மேக்ரனை விரக்தியடைய செய்தது, பின் சல்மான் இந்த சந்திப்புக்கு நிபந்தனை விதித்தது மேக்ரனுடைய கோபத்தை மேலும் தூண்டியது…” என செய்தி வெளியிட்டது.

அரபுலக வளைத்தளம் 09/04/2018 அன்று (ராய்டர்ஸ்/ பூல்) ஆகியவற்றை குறிப்பிட்டு வெளியிட்ட செய்தியில்:

இந்த இராஜாங்கத்துடன் பிரஞ்சு நிறுவனங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை பெறுவதற்கு நிபந்தனைகள் விதித்து சவூதியின் பட்டத்து இளவரசர் பின் சல்மான் பிரஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரனை கோபமடைய செய்துள்ளார் என்று என LA ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது இந்த செய்தித்தாள் கூறியது. “பின் சல்மான் மேக்ரனிடம் ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளாதிருக்கும் பட்சத்தில் அமெரிக்க குழுமங்களை போன்று பிரஞ்சு நிறுவனங்களும் தமது இராஜாங்கத்துடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளலாம் என விவரித்தார்,” இந்த நிபந்தனையை விதித்தது மேக்ரனை கோபமூட்டியது.

2) அவர்கள் ‘பெருமையாக கூறி வந்த’ மூலோபாய கூட்டணி ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை, மாறாக அதில் கையெழுத்திடுவதற்கு 2018 இறுதி வரை தள்ளிப்போட்டு எட்டு மாதம் தாமதமாக்கியுள்ளனர்.

சர்வதேச திட்டங்களில் மாற்றம் ஏற்படுவது துரிதமாக நடைபெறக்கூடியது என்பது நன்கறிந்தது. ஆகவே, முடிவு செய்யப்பட்டு கையெழுத்திடுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட உடன்படிக்கைகள் அல்லது ஒப்பந்தங்களின் காலக்கெடு நீண்டு இருக்கும்பட்சத்தில் பெரும்பாலும் அது நிறைவேற்றப்படுவதில்லை. பிரஞ்சு அதிபருக்கு நெருக்கமானவர்கள் செய்தி நிருபர்களிடம் மேக்ரனும் முஹம்மது பின் சல்மானும் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கும் படியான ஒரு மூலோபாய ஆவணம் (Strategic document) ஒன்றை தயார் செய்வார்கள் என அறிவித்தனர். இது இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்திடும் வகையிலான ஒப்பந்தங்களை சவூதி அரேபியாவுக்கு எடுத்துச் செல்வதற்கு (மேக்ரன்) இட்டுச் செல்லும் (அல் பயான் 10/4/2018). அல் அரேபியா இணையதளமும் 9/4/2018 திங்களன்று: “அதிபரும் இளவரசரும் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கும்படியான ஒரு மூலோபாய ஆவணம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்வார்கள் மேலும் இந்த ஆண்டு இறுதியில் மேக்ரன் மேற்கொள்ள இருக்கும் சவூதி அரேபியாவுக்கான விஜயத்தின் போது கையெழுத்தாகக்கூடிய ஒப்பந்தங்களையும் தயாரிப்பார்கள்” என செய்தி வெளியிட்டது, இது குறித்து பிரான்ஸ் 24 எனும் இணையதளத்திலும் 09/04/2018 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

3) மேலும் இதுகுறித்து பிரஞ்சு அதிபர் அறிவித்திருப்பதெல்லாம் நம்பிக்கை எனும் கட்டமைப்புக்குள்ளானதாகவும் செயல்படக்கூடிய ஒப்பந்தங்களாக மாறுவதற்கு பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்தாலோசனைகள் மேற்கொள்வதற்கு தேவையான நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கின்றது:

“ஒரு புதிய ஒத்துழைப்பு ஏற்படும் என நாம் நம்புகிறோம், தற்போதய ஒப்பந்தங்களில் குறைவாக கவனம் செலுத்தி எதிர்காலத்துக்கான குறிப்பாக டிஜிட்டல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளின் முதலீடுகளுக்காக அதிக கவனம் செலுத்துகறோம்,” என பிரஞ்சு அதிபர் கூறினார். (ஏ.எஃப்.பி 5/ 04/2018)

முஹம்மது பின் சல்மானுடைய பிரான்ஸ் விஜயத்தின் போது சுற்றுலா துறை அதாவது இராஜாங்கத்தின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அல் ஹிஜ்ரை (மதா’இன் ஸாலிஹ்) யுனெஸ்கோவின் உலக புராதன சின்னங்களின் வரிசையில் இடம்பெற செய்வதற்கு பாரிஸ் ரியாதுக்கு உதவுவது மற்றும் இதர துறைகளான சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து போன்று இன்னும் பல்வேறு துறைகள் உட்பட 12 நெறிமுறைக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிலையை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. (ஏ.எஃப்.பி 08/04/2018)

4) ஆகவே, மிக குறுகிய கால விஜயமாக (இரண்டு நாட்கள்) இருந்ததால் குறிப்பிடும்படியான எந்தவொரு பொருளாதார ஒப்பந்தமும் இந்த விஜயத்தின் போது கையெழுத்தாகவில்லை, இது எலிஸீ அரண்மனைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தான் சவூதி இளவரசர் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட மூன்று வார பயணத்துக்கு பின்பு பிரான்சுக்கு குறிகிய கால பயணம் மேற்கொண்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்: பட்டத்து இளவரசர் முதல்முறையாக மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணத்தில் பிரான்ஸையும் உள்ளடக்கியதை எலிஸீ வரவேற்கிறது… (பிரான்ஸ் 24/ ஏ.எஃப்.பி 05/04/2018), மேலும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதது எலிஸீயை சங்கடத்திலும் ஆழ்த்தியது: “மறுபுறம், ஒரு பிரஞ்சு இராஜாங்க அதிகாரி பிரான்ஸ் 24 இடம் பிரான்ஸ் “கடந்த காலங்களை போன்று சவூதி அரேபியாவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை நாங்கள் மேற்கொள்ளவில்லை, மாறாக அதனுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒத்திருக்கும் அளவில் ஒரு நீண்டகால இலக்கின் அடிப்படையிலான ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கு நாடுகிறோம்” என கூறினார். (ஏ.எஃப்.பி, 08/04/2018)

5) இவையனைத்தையும் வைத்து பார்க்கையில், இந்த விஜயத்தை நியாயப்படுத்த வேண்டும் என்றால், அது ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட பின் சல்மானின் இதயத்தை கவர்ந்த ஒப்பந்தமாகும்; அந்த ஒப்பந்தம் என்னவென்றால் தேசிய ஆர்கெஸ்ட்ரா ஒன்றையும் ஒபேரா ஹவுஸ் ஒன்றையும் உருவாக்குவதற்கானது, அதை எங்கே உருவாக்குவது? இரு புனித மஸ்ஜிதுகள் இருக்கும் பூமியில்!! பிரஞ்சு கலாச்சாரத்துறை அமைச்சர் பிரான்கொய்ஸ் நிஸ்ஸென் பாரீஸ் ஆர்கெஸ்ட்ரா ஒன்றையும் ஒபேரா ஹவுஸ் ஒன்றையும் உருவாக்குவதற்கு ரியாதுக்கு உதவும் என கூறினார். “தேசிய ஆர்கெஸ்ட்ரா ஹவுஸ் ஒன்றும் ஒபேரா ஹவுஸ் ஒன்றும் உருவாக்குவதில் சவூதி அரேபியாவுக்கு உதவுவதற்காக பாரிஸ் ஒபேரா ஹவுஸுடன் ஒப்பந்தம் ஒன்று இன்று கையெழுத்தானது ” என பாரீசில் சவூதி அரேபியாவின் கலாச்சார மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அவாத் அல்- அவாதுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு பின்னர் நிஸ்ஸென் கூறினார்.( 09/04/2018 அன்று அரபு வேர்ல்ட் இணையத்தளத்தில் (ராய்டர்ஸுடன் ஒன்று சேர்ந்து)

இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முந்தய நாளான ஞாயிறன்று அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு முன்பாக தெற்கு பிரான்சில் ஈஸ்டர் பண்டிகையை முடித்து வைக்கும் விதமாக நடத்தப்பட்ட இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டார்: இளவரசர் பின் சல்மான் அமெரிக்காவிலிருந்து 08/04/2018 ஞாயிறன்று பிரான்ஸ் வருகை புரிகிறார். நாட்டின் தெற்கு பகுதியில் மார்ஷெல் நகருக்கு அருகாமையில் உள்ள அய்க்ஸ்-என் பகுதிக்கு பாரம்பரிய இசை கலைஞர்களான டெபுஸ்ஸி, ராபர்ட் ஷூமேன் மற்றும் ஃபெலிக்ஸ் மெண்டல்சன் ஆகியோரது இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கிறார். (ஏ.எஃப்.பி 08/04/2018)

6) ஆக இந்த விஜயம் ஒபேரா ஹவுஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாத வரைக்கும, அல்லாஹ் இதிலிருந்து நம்மை பாதுகாப்பானாக, உடன்படிக்கைகள் அல்லது ஒப்பந்தங்கள் ஆகிய எவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லை! இது 10/4/2018 செவ்வாயன்று நடத்தப்பட்ட இறுதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெளிவானது, அது 11/4/2018 ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. அது நெறிமுறைகள் மற்றும் நோக்கங்களுடைய ஒப்பந்தங்களின் விஷயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது ஒபேரா ஹவுஸை தவிர்த்து ஏனெனில் அது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டதாகும் ! அல்ஜசீரா வளையதளம் 11/4/2018 அன்று வெளியிட்ட செய்தியில்: சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் பிரான்சுக்கான இரண்டு நாள் பயணத்தை செவ்வாயன்று பிரஞ்சு மற்றும் சவூதி நிறுவனங்களுக்கிடையே 18 பில்லியன் டாலர்கள் மிதிப்பிலான 19 நெறிமுறை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முடித்து கொண்டார். அவற்றில் தொழில்துறைகளான பெட்ரோகெமிகல், நீர் சுத்தகரிப்பு, மற்றும் சுற்றுலா, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் வேளாண்மை ஆகியவை தொடர்பாக நோக்க உடன்படிக்கைகள்… இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சவூதி அராம்கோ எண்ணை நிறுவனத்தின் அறிவிக்கையாகும், பிரஞ்சு குழுமம் உலகின் மிகப்பெரிய எண்ணை சுதரதகரிப்பு நிலையத்தை கொண்டிருக்கும் ஜுபைலில் (சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணம்) பெட்ரோ கெமிகல் ஆலையை கூட்டாக உருவாக்க டோடல், டெக்னிப் மற்றும் சூயஸ் உட்பட பிரஞ்சு நிறுவனங்களுடன் 12 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பை கொண்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாக அறிவித்தது. அராம்கோவுடனான இந்த ஒப்பந்தங்களும் அராம்கோவுடைய வியாபாரத்தை பெருக்குவது சம்மந்தமாக மட்டும் இருக்கவில்லை, மாறாக அது பிரஞ்சு சுத்தகரிப்பு நிலையத்தின் நிதி வருவாயை அதிகரிப்பது குறித்தே அதிகம் கவனம் செலுத்துவதாக இருக்கின்றது.

இவ்விஷயம் ஏப்ரல் 11, 2018 அன்று ஏ.எஃப்.பியிலும் செய்தி வெளியிடப்பட்ட்டது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தொழிலதபர்கள் மற்றும் இரு அரசுகளுடைய பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரஞ்சு-சவூதி வர்த்தக மன்றம் அளித்த அறிக்கையின் பிரகாரம் சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் செவ்வாயன்று பிரான்சுக்கான தனது பயணத்தின் முடிவில் பிரஞ்சு மற்றும் சவூதி நிறுவனங்களுக்கிடையே 18 பில்லியன் டாலர்கள் மிதிப்பிலான 19 நெறிமுறை ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. அவை தொழில்துறைகளான பெட்ரோகெமிகல், நீர் சுத்தகரிப்பு, மற்றும் சுற்றுலா, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் வேளாண்மை ஆகியவை தொடர்பான நோக்க உடன்படிக்கைகளாகும்”.

பத்திரிக்கையாளர் சந்திப்பில், மேக்ரனும் பின் சல்மானும் வழக்கமான பிரச்சனைகளை தான் குறிப்பிட்டனர் அதாவது ஈரான், அணுசக்தி ஒப்பந்தம், சிரியா, யமன் போன்ற பிரச்சனைகள் ஆனால் அந்த பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வு என்னவென்று குறிப்பிடாமல்.

நான்காவதாக: முடிவுறை

நாம் மேலே கூறியதை மீண்டும் கூறுகிறோம்: முஹம்மது பின் சல்மான் (எம்பிஎஸ்) மேற்கொண்ட விஐயங்களில் மிகமுக்கியமானது அமெரிக்காவின் விஜயமாகும். பிரிட்டனுக்கான அவருடைய விஜயமானது சவூதி அரேபியாவில் அதனுடைய கைப்பாவைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள காரணத்தால் அதை ஆறுதல் படுத்துவதற்கான விஜயமாகும். அதனோடு சேர்த்து பிரான்சுக்கான அவருடைய விஜயமானது அங்கு தனக்கு புகழை பெற்றுத்தரும் ஒரு சூழலை உருவாக்குவதற்கான விஜயமாகும், இங்ஙனம் முஹம்மது பின் சல்மான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் நாடுகளுக்கு விஜயம் செய்ததாக கூறப்படுகிறது.

Comments are closed.