சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

முதலாளித்துவ சிந்தனையின் தோல்வியை தோலுரித்து காட்டும் பிரிட்டிஷ் சுகாதார அமைப்பின் (NHS) நிலை.

செய்தி:
சமீப காலமாக பிரிட்டிஷ் ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அதிகமாக விவாதிக்கப்படும் விஷயமாக பிரிட்டிஷ் அரசின் சுகாதார அமைப்பான National Health Service (NHS) மற்றும் அதற்கு அரசு வழங்கும் நிதி குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அரசிடமிருந்து சரியான முறையில் பணம் பெறப்படாததால் ஏற்படும் மருத்துவ குறைபாடு குறித்தும் நாட்டில் அதிகரித்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கு ஈடான உழைக்கும் இளைஞர் சமுதாயம் குறைந்துவருவது ஆகிய இவை குறித்தும் ஒவ்வொரு வாரமும் பெருவாரியாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.  இந்த வாரமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் இவ்வமைப்பு 70 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் இந்த தருவாயில் இவை குறித்த விவாதம் அங்கு இன்னும் அதிகரித்திருக்கிறது.

ஜூன் மாத இறுதியில் வெளியான உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுகாதார அமைப்புகளின் செயல்பாடு குறித்த ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதில், “உலகமே பொறாமை கொள்ளும்” என்று NHS இன் நிறுவனரின் கூற்றும் இவ்வமைப்பை பற்றி பல வருடங்களாக அங்குள்ள அரசியல்வாதிகள் கொண்டிருந்த பெருமையும் தவிடுபொடியாகும் ஆய்வு முடிவுகள் தரப்பட்டிருந்தன. உலக அளவில் உள்ள சுகாதார அமைப்புகளில் முக்கிய உயிர்கொல்லியான 12 நோய்களில் 8 நோய்களுக்கு NHS மிகவும் மோசமான (below average performance) மதிப்பெண்களையே பெற்று மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அந்த முழு ஆய்வறிக்கையும் ஒரே தீர்வை நோக்கியே சுழன்றுகொண்டிருந்தது – NHS அமைப்பிற்கு அரசு வழங்கும் நிதி.  கருத்துக்கணிப்பு ஒன்றில் 10 க்கு 9 பேர் கூறுகையில் NHS அமைப்பிற்கு வழங்கப்படும் நிதி இன்னும் 5 ஆண்டுகளுக்கு இதே போல் வழங்கப்பட்டால் இவ்வமைப்பு அழிந்துபோகும் என்று கூறியுள்ளனர்.

விளக்கம்:

சுகாதார அமைப்பின் அனைத்து பிரச்சினைகளும் அதற்கு வழங்கப்படும் நிதி என்கிற ஒற்றை விஷயத்தை மைய்யமாக்கி பேசப்படுகிறது. மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கும் நேரம், செவிலியர்கள் பற்றாக்குறை, நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள், தாறுமாறாக உயர்ந்துபோயிருக்கும் மருத்துவ செலவு, இன்னும் இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நிதி பற்றாக்குறையே பிரதான காரணமாக திட்டமிட்டு சொல்லப்படுகிறது. அதேபோல் இளவயதினருக்கு சிறப்பு வரி, மருத்துவர்களுக்கான குடியேற்ற கொள்கைகளை (Immigration Policy) தளர்த்துதல் ஆகிய இவையும் பொருளாதாரம் சார்ந்த தீர்வுகளாவே முன்வைக்கப்படுகின்றன. நிச்சயமாக இதை தவிர முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளிடமிருந்து வேறெந்த தீர்வையும் எதிர்பார்க்கமுடியாது.

இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், முதுமை அடைந்தவர்களை கவனித்துக்கொள்வதற்காக (மருத்துவம் சார்ந்து) நடுத்தர வயதினர் மீது புதிய வரி ஒன்றை அமல்படுத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திட்டம் இருப்பதாக BBC செய்தி ஒன்றை வெளியிட்டது. ஒருபுறம், பிறப்புவிகிதம் குறைந்துவிட்டதால் புதிய உழைக்கும் மக்கள் கூட்டம் உருவாகவில்லை. மறுபுறம், உழைத்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டம் முதுமை அடைந்து வரி வரவு குறைந்துபோய்விட்டது. இன்னும் இந்த முதுமை கூட்டத்தினர் அதிக ஆண்டுகள் வாழ்வதால் அவர்களின் மருத்துவ செலவும் அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையானது முதலாளித்துவாதிகளால் பொருளாதார பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அவர்களின் பார்வையில், வரி வரவு குறைவதாலும் மக்களின் தேவைகள் அதிகரிப்பதாலும் நாடு ஏழ்மையை நோக்கி நகர்கிறது.

முதலாளித்துவ நாடுகள் துன்பப்படுவதற்கு முக்கிய காரணம் ஏழைகளின் மீது பணக்காரர்களின் கடுமையான அடக்குமுறையும் அங்கு அவர்கள் மத்தியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தான். சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, அமெரிக்காவில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சாதாரண வேலைக்காரர் ஆகிய இவர்களின் வருமானத்தில் உள்ள வேறுபாடு விகிதம் 339:1 என்று குறிப்பிட்டுள்ளது. மிக அதிகப்படியாக 5000:1 என்கிற அளவிலும் வேறுபாடு சில நாடுகளில் உள்ளது. முதலாளித்துவ பொருளாதார கொள்கை, தனி நபர் ஒருவர் தன் சக்திக்குட்பட்டு எவ்வளவு பொருளாதாரத்தையும் திரட்டிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த சிந்தனையின் அடிப்படையில், மக்களிடம் நிலவும் வறுமைக்கு காரணம் வளங்களின் பற்றாக்குறை தான். அதிகப்படியான வளங்களை பெருக்கினால் மட்டுமே வறுமையை ஒழிக்கமுடியும் என்று சொல்கிறது. ஆனால் தனிமனித தேவை என்ன என்பதையோ அதன் அளவுகோல் என்ன என்பதை பற்றியோ அது யோசித்து பார்க்கவோ பேசவோ மறுக்கிறது.

சமூகம் என்பது வெறும் தனி மனிதர்களின் தொகுப்பு என்று சொல்லும் முதலாளித்துவ சித்தாந்தம், பிரச்சனைகளுக்கான காரணமாக பணப்பற்றாக்குறையை மட்டுமே பார்க்கிறது. எனவே, பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரே வழியாக பணத்தையும், அந்த பணத்தை திரட்டுவதற்காக பொருளாதாரத்தை மேம்படுத்துவது, கூடுதல் வரிவிதிப்பது மற்றும் அதல்லாத குறுக்குவழிகளில் பொருளீட்டுவது என்று பல வழிமுறைகளை கையாளும். முதலாளித்துவ நாடுகளை பொறுத்தவரை GDPஐ பெருக்குவதை தவிர வேறெந்த விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் வரலாறு.

பணக்கார முதலாளிகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் துயரங்களால் நேரடியாக பாதிப்படைவதில்லை. NHS இன் துயர நிலையும் அவர்களை எவ்விதத்திலும் பாதிப்படைய செய்ய போவதில்லை. எனவே அவர்கள் மக்கள் படும் துயரங்களை குறித்து உண்மையான அக்கறையோ சிந்தனையோ கொள்வதில்லை ஏனெனில் தற்போதைய பொருளாதார கொள்கை அவர்களின் தீராத பொருளாசைக்கு தீனி போடும் விதமாக உள்ளது. எனினும், இவர்களல்லாத ஏனைய மக்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும் முதலாளிகளின் அடக்குமுறையாலும் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். சமூகம் குறித்த இவர்களின் சிந்தனையை உடனடியாக மறுஆய்வு செய்யவேண்டிய நேரமிது! பொருளாதாரம் என்பது உணவு பாத்திரம் போலவும் மக்கள் தங்களின் சக்திக்கேற்ப அதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும், அரசின் பொறுப்பு என்பது வெறும் அந்த பாத்திரத்தின் அளவை அதிகரிக்க செய்வது மட்டும்தான் என்று இவர்கள் புரிந்துவைத்திருக்கும் சிந்தனை உண்மையில் போலியானது. இந்த தவறான புரிதல்தான் பிற மக்களின் உழைப்பை திருடி பணக்காரன் மேலும் பணக்காரனாக ஆவதற்கு வழிவகை செய்கிறது.

NHS அமைப்பின் தற்போதைய துயர நிலை மற்றும் அதற்கான தீர்வாக இன்று விவாதிக்கப்படும் தீர்வென்பது, காலங்காலமாக தனிநபர்களின் தேவையை நிராகரித்துவிட்டு சமூகம் குறித்து ஒட்டுமொத்தமாக ஒரு தவறான பார்வையை செலுத்தி அதன் மூலமாக ஏழைகளை இன்னும் கடினமாக உழைக்கச்செய்து அதன் வழியாக மேல்தட்டு பணக்கார சமூகத்தை வளப்படுத்தும் முதலாளித்துவ சித்தாந்தத்தின் தந்திரம்தானே தவிர உண்மையில் இவர்களுக்கு மக்களின் விவகாரங்களில் அவர்களின் அடிப்படை தேவைகளில் துளியும் அக்கறை இல்லை என்பதை தான் இவை காட்டுகின்றன.

Comments are closed.