சமீப பதிவுகள்

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம்…!!!

செய்தி:

2018 ஆகஸ்ட் 31ல் மலேசிய அரசு பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெற்ற அறுபதாவது ஆண்டை கொண்டாட உள்ளது. இத்தினம் புனிதமிக்க தினமாக கருதப்படுகிறது. நானூறு வருட காலனியாதிக்க பிடியிலிருந்து மலேசியா விடுபட்ட தினத்தை மக்களுக்கு நினைவூட்ட கூடியதாக இது இருக்கின்றது. குறிப்பாக இந்த வருட கொண்டாட்டத்தை விமர்சியாக கொண்டாட சிலர் திட்டமிட்டுள்ளனர். இது ஏனெனில் Barisan National என்ற குழுவின் அரசியல் கட்சியான UMNO வின் இரும்புப்பிடியிலிருந்து விடுதலை பெற்ற ஆண்டு என்று கூறுகின்றனர். மேலும் ‘Loving Malaysia’ ‘மலேசியாவை நேசிக்கிறோம்’ என்ற முழக்கத்துடன் சென்ற ஆட்சியின் கடுமையான சட்டத்திலிருந்து இனி விடுதலை என்ற நம்பிக்கையுடன் மலேசிய மக்கள் இத்தினத்தை வரவேற்கின்றனர், இருப்பினும் இதே எதிர்பார்ப்பை ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் நாம் வைக்க முடியாது. புதிதாக வந்திருக்கக்கூடிய பகதான் அரசு, அவர்கள் வாக்குருதி அளித்த உண்மையான ஜனநாயகத்தை நடை முறை படுத்துவார்களா? நாம் உண்மையான சுதந்திரத்தை கொண்டாடுகிறோமா ? பல நூற்றாண்டுகளாக நாம் காலனியாதிக்கம் செய்யப்பட்டு நம்முடைய வளங்கள் சுரண்டப்பட்டு கொண்டிருந்தன. ஆனால் நாம் இன்றும் நம் வாழ்கையின் எல்லா விஷயங்களுக்கும் மேற்குலகை நம்பி இருகின்றோம். இன்னும் சொல்லபோனால் நம்முடைய சட்டங்கள், பொருளாதார திட்டங்கள், அரசியல்,நிறுவனங்கள், கல்விமுறை என அனைத்தும் மேற்குலகம் உருவாக்கி கொடுத்த வழிமுறையாகும். இப்படியிருக்க உண்மையான சுதந்திரம் என்றால் என்ன ?

கருத்து:

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது நேரடியான காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு, எந்த ஒரு வெளி சக்திகளாலும் கட்டுபடுத்தப்படாமல் இருப்பதாகும். சுதந்திர நாடு என்பது சுதந்திரமாக முடிவெடுக்கக்கூடிய நாடாகும். தன் நாட்டின் அரசியல் அமைப்பு, பொருளாதார அமைப்பு, சமூக கட்டமைப்பு, கல்வி போன்றவைகள் எப்படி இருக்க வேண்டும் என்று தானே முடிவெடுக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும்.

தனிமனிதனின் சுதந்திரம் என்பது ஒருவர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல், அடிமைதனத்திலிருந்து விடுபட்டு, தன்னுடைய வாழ்கையை தானே தீர்மானிக்கும் உரிமை பெற்றவர் என்பதாகும். மலேசியா சுதந்திரம் அடைந்திருப்பதாகவும் அதன் குடிமக்கள் சுதந்திர உரிமை பெற்றிருப்பதாகவும் பலர் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையில் மக்கள் அந்நிய நாட்டவர்களின் பிடியில் இருக்கிறார்கள் என்பதும் அந்நிய கொள்கைகளே அவர்களை ஆளுகின்றது என்பதையும் அவர்கள் உணரவில்லை. இதனால் தனிநபர்கள் தங்களின் வாழ்க்கை விவகாரங்கள் அனைத்தும் அந்நிய நபர்களால் தீர்மானிக்க படுகின்றது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. பின்வரும் அல்லாஹ்வின் வார்த்தை இதனை தெளிவாக விளக்குகின்றது.

(اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَٰهًا وَاحِدًا لَا إِلَٰهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ)

“அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் ரப்பாக ஏற்று கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே, கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை-அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்”. [அத்-தவ்பா: 31]

அதி இப்னு ஹாதிம் (ரழி) என்ற நபித்தோழர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து யூதர்களும் கிருஸ்தவர்களும் குர்ஆனில் கூறியது போல ரபாய்களையும் பாதிரிகளையும் வணங்க வில்லையே என வினவினார். அதற்கு ரசூல் (ஸல்) அவர்கள்….

«أليس يحرِّمون ما أحلَّ الله فتحرِّمونه، ويحلُّون ما حرَّم الله فتحلُّونه؟ قال: قلت: بلى! قال: فتلك عبادتهم»

“அவர்கள் (ரபாய் மற்றும் பாதிரியார்கள்) அல்லாஹ் ஹலால் ஆக்கியதை ஹராமாக்கும் பொழுது (யூதர்களும் கிருஸ்தவர்களும்) ஹராமாக ஏற்றுகொண்டார்கள், (அதேபோல்) அல்லாஹ் ஹராம் ஆக்கியதை இவர்கள் ஹலால் ஆக்கும்பொழுது ஏற்றுகொண்டார்கள் தானே?” என வினவினார்கள். அதி (ரலி) ‘ஆம்“ என்று கூறினார்கள். அதற்கு ரசூல் (ஸல்) “இதுவே அவர்களின் வழிபாடாகும்” என கூறினார்கள். [தபரி]

இது அடிமைத்தனத்தின் ஒரு பகுதியாகும். இதனை பலர் உணர்ந்து கொள்வதில்லை. பின்பற்றுபவர்கள் தங்கள் தலைவர்கள் என்ன கூறினாலும் அப்படியே ஏற்று நடப்பார்கள். அவர் ஒன்றை செய் என்று சொன்னால் உடனே அவர்கள் செய்து விடுவார்கள், மேலும் ஒன்றை செய்யாதே என்று அவர் கூறினால் அதிலிருந்து உடனே விலகி விடுவர். அது அல்லாஹ் (சுபு) வின் ஏவல் விலக்கல்களுக்கு முற்றிலும் மாற்றமானது என்பதை அவர்கள் பார்ப்பதில்லை.

நம்முடைய வாழ்கையில் மிகைத்திருக்கும் தற்போதைய அமைப்பானது இதனை தெளிவாக விளக்குகின்றது. அதுதான் மதசார்பின்மை கொள்கையை அடிப்படையாக கொண்ட ஜனநாயக அரசமைப்பாகும். இவ்வமைப்பில் அல்லாஹ் (சுபு) வின் ஏவல் விலக்கல்களுக்கு எந்த பங்கும் இல்லை. பெரும்பான்மையை கொண்டே சட்டங்கள் ஏற்றபடுகின்றன. இறையாண்மை (சட்டம் ஏற்றும் அதிகாரம்) முழுவதும் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளன. பிறகு சட்டம் ஏற்றிய பிறகு, மனிதர்கள் அச்சட்டத்திற்கு கட்டுபட நிர்பந்திக்கப்படுகிறார்கள். எவர் அச்சட்டத்திற்கு மாறுபடுகிறாரோ அவர் தண்டிக்கப்படுகிறார். ரசூல் (ஸல்) கூறியது போல இதுவும் ஒருவிதமான மனித வழிபாடாகும்.

ஆம், தற்போதுள்ள நவீன காலத்தில் பாதிரிமார்கள் ஹலால், ஹராமை தீர்மானிப்பதில்லை. மாறாக இன்றுள்ள அரசியல்வாதிகளே இதனை தீர்மானிக்கின்றனர். மனித உரிமை, சுதந்திரம் போன்றவைகளை இதற்கு அவர்கள் காரணம் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் அது மனிதனின் மனோஇச்சை அடிப்படையிலேயே இருக்கின்றது. ஷரியாவின் எந்த அடிப்படையிலும் அது இருப்பதில்லை. இது போன்ற மனித மூலையிலிருந்து வந்த அரசியல் அமைப்பின் விளைவு, இன்று உலகம் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருகின்றது.

மனிதன் மனிதனை அடிமைப்படுத்துதலின் எல்லாவிதமான துன்பங்களையும் விட்டு மனிதனை மீட்கவே இஸ்லாம் வந்துள்ளது. இஸ்லாம் நம்மை உண்மையான தன்னிச்சை உடையவர்களாகவும், ஒரே இறைவனான அல்லாஹாவை மட்டும் வணங்க கூடியவர்களாகவும் ஆக்கி விடுகின்றது. காதிசியா போரில் சாத் பின் அபீ வக்காஸ் அவர்களின் தூதுவரான ரூபய் பின் ஆமிர் (ரலி) அவர்களுக்கும் பாரசீக தளபதி ருஷ்துமிற்கும் நடந்த உரையாடலே இதற்கு சாட்சியாக இருக்கின்றது. முஸ்லிம் படை ஏன் பாரசீக மண்ணை படையெடுத்து வருகிறார்கள் என ருஷ்தும் கேட்டதற்கு ரூபய் கூறினார்கள், படைப்பினங்களை வணங்குவதை விட்டு படைத்தவனை வணங்குவதற்கும், குறுகிய இவ்வுலக சிந்தனையை விட்டும் விசாலமான இவ்வுலகம் மற்றும் மறுஉலக சிந்தனையை உருவாக்குவதற்கும், மற்ற மார்க்கங்களின் அடக்குமுறையிலிருந்து நீதமான இஸ்லாமிய மார்க்கத்திற்கு உங்களை கொண்டுவருவதற்குமே அல்லாஹ் (சுபு) எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளான். உங்களை நீங்களே வணங்குவதை விட்டும் உங்களை பாதுகாக்கவே அல்லாஹ் (சுபு) எங்களை அனுப்பியுள்ளான் என கூறினார்கள்.
[இப்னு ஜரீர் அத்தபரி , தாரிகுல் உமம் வல் முல்க் ii / 401, தாருல் குதுப் அல் இல்மியா, பெய்ருத்]

Comments are closed.