சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

திரை நேரமும் நம் இளைஞர்களும் – இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நோய்…!!!

செய்தி :

அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பார்ப்பதன் மூலமாக வீணாக்கப்படும் திரை நேரம் என்னும் பிரச்சனை இன்று முஸ்லீம் இளைஞர்களின் மத்தியில் மிக வேகமாக பரவிவரும் தொற்றுநோயாக உள்ளது. இளம்பெண்கள், இளம் ஆண்கள், பதின்மவயதினர், பருவ வயதை எட்டியவர்கள் என்று அனைத்து இளவயதினரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த விவகாரம் அவர்களுக்கு 3 ஆவது கைபோன்று ஆகிவிட்டது. கையில் போன் இல்லாத  நிலையில் அதீத பதற்றநிலைக்கு கொண்டுசேர்க்கும் நோமோபோபியா (Nomophobia) நோய்க்கு இன்று தள்ளப்பட்டவர்களும் இதில் பலர்.

கருத்து :

தொடர்ச்சியாக பார்க்கப்படும் புகைப்படங்கள், சிறிய மற்றும் பெரிய வீடியோக்கள், விளம்பரங்கள் அவர்களின் கண்களின் வழியாக ஊடுருவி எளிதில் அணுகக்கூடிய அவர்களின் உள்ளங்களில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவிடுகின்றன. குழந்தைகளிடம் சென்று பேசினாலும் போன் உலகில் மூழ்கியிருக்கும் அவர்கள் முகம்கொடுத்தும் பேசாத நிலையே உள்ளது. சில குழந்தைகள் வீட்டு வேலையோ உடல் உழைப்போ அல்லது பாடம் படிக்கவோ மறுக்கின்றனர். நிச்சயமாக இது அவர்களின் தூங்கும் நேரத்தை கணிசமாக இரையாக்கிவிடுகிறது. சில நிமிடங்கள் ஓடும் சிறிய வீடியோக்கள் தான் என்று எண்ணிக்கொண்டு அவற்றின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு இறுதியில் அவர்களின் நாளின் முக்கியமான பல மணி நேரங்களை வீணாக்கிவிடுவதை பின்னரே உணர்கின்றனர். பார்வையாளர்களின் பார்வை பலமணிநேரம் திரையைவிட்டு  விலகாதவண்ணம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இழுக்கும் வார்த்தைகளையும் கவர்ச்சிகரமான வண்ணங்களையும் இதுபோன்ற மற்ற சில டிசைன்களையும் பயன்படுத்துகின்றது இணைய உலகம்.

திரை நேரங்களில் தங்களை இழக்கும் இளைஞர்கள் வாழ்வை குறித்து எந்த தெளிவும் சிந்தனையும் இல்லாத, மனம்போனபோக்கில் வாழும் ஒரு வாழ்க்கைமுறைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இலக்காக்கப்படுகிறார்கள் என்பதே வெளிப்படையான உண்மை. “வாழும் வாழ்க்கை ஒருமுறைதான்” எனவே வாழ்ந்து அனுபவித்து இன்பத்தின் எல்லைகளை தொட்டுவிடவேண்டும் என்று சொல்லக்கூடிய ஹாஷ்டாக்’கள் (Hashtags) இளைஞர்களுக்கு தீங்கை தவிர எந்த பயனையும் தந்துவிடப்போவதில்லை. அதீத ஆற்றலும், விரைவாக சிந்திக்கும் திறனையும், நல்ல உடல் உழைப்பு ஆற்றலையும் பெற்றுள்ள வாழ்வின் முக்கியமான பருவத்தையுடைய இந்த இளவயதினர் தங்களுக்கு இறைவன் கொடுத்த விலைமதிப்பற்ற ஆற்றல்களையும், இழந்துவிட்டால் திரும்பப்பெற முடியாத அறியசெல்வமான நேரத்தையும் இளமையையும் எதற்கும் பயன்படாத திரையிடம் இழந்து நிற்கிறது.

தொடர்ச்சியாக பார்க்கப்படும் ஆபாச படங்கள், வீடியோக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் சார்ந்த ஓரினை சேர்க்கை வீடியோக்கள் முஸ்லிம்களின் இல்லங்களிலும் நுழைந்துவிடுவதோடு இளைஞர்களின் மனநிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதுமட்டுமல்லாமல் இன்று பிரபலமாகிவரும் ஆன்லைனில் நேரடியாக பாடல்களுக்கு பாடுவதும், நடனமாடுவதும், திரைவசனங்களை ஓடவிட்டு அதைப்போன்று பேசுவதும் நடிப்பதும், விகாரமான வேஷங்கள் போட்டுகொண்டு பிறரை பயமுறுத்துவது, கடிமான சவால்களை எதிர்கொள்வதாக சொல்லி வாழ்வை பணயம் வைப்பது போன்று இன்று நம் முஸ்லீம் இளைய சமுதாயம் எதற்கும் பயன்தராத அழிவைநோக்கி அழைத்துச்செல்லும் காரியங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கவர்ச்சிகரமான உணவு வகைகள் வீடியோக்களில் மட்டுமே அலங்கரிக்கப்பட்டு பல வியூகங்களை பெற்றுவிடுகிறது. ஆனால் அதை பார்பவர்களில் மிகசிலரேனும் அதை செய்திருப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வியே. நேரத்தை வீண் விரயம் செய்யும் ஆன்லைன் கேள்விபதில்கள்; அறியாத நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகள்; இளம் ஆண் மற்றும் பெண்களை குறிவைத்து ஆன்லைனில் தொடுக்கப்படும் ஆபாச வேண்டுகோள்கள் என்று இதன் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது.

வெளிநாட்டு டிவி தொடர்களாலும், சினிமாக்களாலும் கவரப்பட்டு தங்களை சிறப்புப்படுத்தி கொள்வதற்காக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து போடப்படும் புகைப்படங்களால் ஆண்கள் பெண்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு டீன் கிரஸ் (Teen Crush) என்னும் மோக வலைகளில் சிக்கிவிடுகின்றனர். சினிமா பிரபலங்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரை அப்படியே பிரதிபலித்து தங்களின் பாவனைகளை அவர்களை போல் மாற்றி அந்த படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்வதை பெருமையாக கொள்கின்றனர். இதை ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் செய்கின்றனர் – இதன் பாவப்பின்னணியையும் ஆபத்தையும் உணராமல் உள்ளனர்.

மெல்ல மெல்ல இந்த விஷ சிந்தனைகள் உள்ளத்தில் ஊடுருவி பின்னர் எந்தவித குற்றஉணர்வுமின்றி இந்த தவறுகளை தனிமையிலும் பின்னர் பிறர் பார்க்கும் படியாக வெளிப்படையாகவும் செய்ய துவங்கிவிடுகின்றனர். பின்னர் தங்களை மேலும் பிரபலப்படுத்திக்கொள்வதற்காக இவர்கள் யூடூப் இன்ஸ்டாகிராம் தளங்களில் தனியாக சேனல்கள் ஆரம்பித்து உலகறியும் பிரபலம் ஆகும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர் – தாங்கள் செய்யும் செயல் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்கிற எண்ணம் துளியும் இல்லாமல் நவீன காலத்தின் எதார்த்தம் இவை என்று ஆகிவிட்ட இந்த நிலை எந்த மதத்தினரையும், எந்த சமுதாயத்தினரையும் விட்டுவைக்கவில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் எளிதில் எட்டும் வகையில் உள்ள இணையசேவையால் இதன் பாதிப்பினை கடந்துவராதவர் எவருமில்லை என்கிற நிலையே உள்ளது.

ஹராமான செயல்களாக இருக்கக்கூடிய இத்தகைய செயல்கள் சமூகத்தில் சாதாரணமான ஒன்றாக ஆக்கப்படுவது என்பது இந்த கொடிய விஷத்தை, அதன் உடனடி மற்றும் எதிர்கால பாரதூரமான விளைவுகளை பற்றி கவலை கொள்ளாமல் யார்வேண்டுமானாலும் அருந்திக்கொள்ளலாம் என்கிற நிலைக்கு இட்டுச்செல்லும். இதன் விளைவுகள் இவர்களின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று இவர்களை சார்ந்தவர்களையும் கவலை அடைய செய்கிறது.

வெறும் தொடர் கண்காணிப்பும் அல்லது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது மட்டும் இந்த கொடிய விஷத்திலிருந்து இளைஞர்களை பாதுகாத்துவிடுமா? முஸ்லிம்களாகிய நாம் இந்த ஃபித்னா நம் இல்லங்களில் நுழையாத வண்ணம் எப்படி பாதுகாக்கப்போகிறோம்?

இந்த முக்கியமான கேள்விகளுக்கு நமக்கு விடை  தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் இதனை இதன் போக்கில் விட்டுவிட்டால் நாளுக்குநாள் இதன் விளைவுகள் நம் வீட்டு மற்றும் நம் சமூக இளைஞர்களை பேரழிவின் பக்கம் இழுத்துக்கொண்டே சென்றுவிடும்.

பெற்றோரும் ஆசிரியர்களும் இதன் விளைவுகளால் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். பெற்றோர்கள் பிள்ளையின் நடத்தையில் வேறுபாட்டை உணர்கின்றனர். ஆசிரியர்களோ நேரடியாக அவர்களின் கல்வியிலும், அவர்கள் கூடும் வகுப்பறையிலும், மைதானங்களிலும் அவர்களின் நட்பு வட்டம் மாறுவதையும் காண்கின்றனர். திரை அடிமைத்தனம் இளைஞர்களுக்கு மிகவும் அவசியமாக உள்ள தூங்கும் நேரத்தை திருடிவிடுவதால் அவர்கள் கவன சிதறல்களுக்கு ஆளாகின்றனர்.

இண்டர்நெட் மூலம் ஆலோசனையை எடுத்துக் கொள்வதில் சிலர் முரட்டுத்தனமாக  யூகத்தை எடுத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தங்களின் உறவினர்களின் நல்லவர்களை போன்று பாவனையும் செய்துகொள்கின்றனர். அவர்களின் அன்றாட வாழ்வின் பகுதியாக இந்த இழிவான தன்மையை எடுத்துக் கொள்வதென்பது அவர்களுக்கும் இஸ்லாமிய கொள்கைகளுக்கும், செயல்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அதிகரிக்கிறது. குர்ஆன் சொல்லும் அறிவுரைகள் மறக்கப்பட்டு, தனிநபர் பொறுப்புகள், குடும்ப பொறுப்புகள் மற்றும் மார்க்க பொறுப்புகள் முற்றிலுமாக புறக்கணிப்படுகிறது. வாழ்வென்பது வெறும் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்திசெய்துகொள்ள கிடைக்கப்பெற்ற சந்தர்பமாகவே பார்க்கின்றனர். மேலே சொன்ன விஷயங்கள் மூலம் முஸ்லீம் இளைஞர்கள் மேற்கத்திய தாராளவாத வாழ்க்கைமுறையை தன்னுள் வேகமாக பரவச்செய்து செயல்களுக்கு அடிப்படையாக இருக்கின்ற ஹலால் மற்றும் ஹராம் என்னும் அளவுகோலை புறக்கணித்து தூர எரிகின்றனர்.

அவர்களின் நடத்தைகளை விளக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ பல்வேறு காரணங்களைப் அவர்கள் சொல்லமுற்பட்டாலும் பொறுப்பாகவும் புத்திசாலித்தனமானவும் மனிதர்களாகிய நாம் அல்லாஹ் (சுபு) இறக்கிவைத்த அஹ்காம் ஷரியாவின் படி  செயல்பட வேண்டும்.

திரை நேரம் தங்களின் வாழ்வின் அதிமுக்கியமான காலகட்டத்தை – இளமையை எவ்வாறு சீரழிக்கிறது என்கிற விழிப்புணர்வை இளைஞர்களுக்கு கொடுக்கவேண்டியது கட்டாயமாக இருக்கின்றது. இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் தெளிவான வழிகாட்டுதல்கள் இளைஞர்களுக்கு வழங்கப்படவேண்டும். பிள்ளைகள் மீது பெற்றோருக்கு மிகவும் நெருக்கமான கண்காணிப்பற்ற பிணைப்பு  இருப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன்  இருக்கவேண்டும். பெற்றோரும் குடும்பத்தினரும் தங்கள் பிள்ளைகளின் திரை நேரத்தை கண்காணிப்பதிலும் முறைப்படுத்துவதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் பிள்ளைகள் இருக்கும் நிலையிலேயே அவர்கள் அவர்களின் இளமையை தவறான வழியில் செலுத்துவதை பெற்றோர் தங்களின் கண்களால் காணநேரும்.

Comments are closed.