சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

பாகிஸ்தானில் முகங்கள் மாறியுள்ளது ஆனால் அமெரிக்காவின் மீதான அடிமைத்தனம் மாறவில்லை.

செய்தி :

பாகிஸ்தானின் புதிய பிரதம மந்திரியான இம்ரான் கான், தனது 22 ஆண்டுகால கனவை நனவாக்கியுள்ளார். இவர் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானிய கிரக்கெட் குழுவில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களாக திகழ்ந்தவர்களில் ஒருவராவார். இவர் 1992 உலக கோப்பையை வென்று தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொண்ட போது தனது புகழின் உச்சத்தை  அடைந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாகிஸ்தானில் உள்ள லாஹூரின் முதல் புற்றுநோய் மருத்துவமனையை கட்ட துவங்கினார். அதை கட்டி முடிப்பதற்கான நிதியை சேகரிப்பதற்காக பாகிஸ்தான் முழுவதிலும் உள்ள பெருநகரங்களில் இருந்து சிறிய நகரங்கள் வரை பயணித்தார். பாகிஸ்தானின் தயாள குணம் கொண்ட மக்கள் அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக நிதி வழங்கினர், இறுதியாக 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.

கருத்து :

பாகிஸ்தானிய அரசியலில் பெனாசிர் பூட்டோவின் தலைமையிலான  பாகிஸ்தானிய மக்கள் கட்சி (PPP) மற்றும் நவாஸ் ஷரீஃபின் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – என் (PML- N)  ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி நிலவிய சமயத்தில் 1994 ஆம் ஆண்டு, இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக்- எ -இன்சாஃப் (PTI) எனும் கட்சியை நிறுவினார். இந்த கட்சி தொடக்கத்தில் சிறிய அளவிலான வெற்றியை மட்டுமே அடைந்தது. 2002 பாகிஸ்தானிய பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை பாகிஸ்தான் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் (PTI) கட்சி புறக்கணித்தது, ஆனால் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அது 7.5 மில்லியன் வாக்குகளை பெற்று வாக்குகளின் எண்ணக்கையின் அடிப்படையில் இரண்டாம் இடத்தையும் தொகுதிகளை கைப்பற்றியதின் அடிப்படையில் மூன்றாம் இடத்தையும் அடைந்தது. அது மத்திய அரசில்  எதிர்கட்சியில் அமர்ந்திருந்தாலும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆட்சியை புரிந்தது.

இம்ரான் கான் 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழலுக்கு எதிராக வலுவானதொரு அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு தன்னை மாற்றத்திற்கான ஒரு ஆக்க சக்தியாக முன்வைத்தார். அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள உறவின் தன்மையை மாற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார், உண்மையில் அது மிகப்பெரும் அளவில் அமெரிக்காவுக்கு ஆதரவானதாகவே இருந்தது. இந்தியாவுக்கு முன் மண்டியிட மாட்டேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு தூய அரசாங்கத்தை வழங்கப்போவதாகவும் அரசுத்துறைகளில் எவ்விதமான அரசியல் தலையீடும் இருக்காது என வாக்குறுதி அளித்தார். ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் ஆளுநர்கள் பயன்படுத்தும் மிக விலையுயர்ந்த வீடுகளை தமது அரசு பயன்படுத்தாது என வாக்குறுதி அளித்தார். தனது அரசு மக்களுக்கு பெருமளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும் விதத்திலான போக்குவரத்து நெறிமுறைகளை பயன்படுத்தாது எனவும் சிக்கன நடவடிக்கைகளை ஊக்குவிக்கப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார். வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான செலவீனங்களை குறைக்கும் விதத்தில் மின்சாரம், எண்ணை மற்றும் எரிவாயுவின் விலைகளை குறைப்பதாக வாக்குறுதி அளித்தார். நபித்துவம் முற்று பெற்றுவிட்டது எனும் விஷயத்தை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்தார். பாகிஸ்தானிய தேசத்தை மதீனாவை போன்று உருவாக்கப்போவதாக வாக்குறுதி அளித்தார்.

எனினும், மாற்றத்திற்கான இந்த முழக்கமானது வெறுமனே அவருடைய வாயச்சவடாலாக தான் இருக்கின்றது ஏனெனில் இம்ரான் கானும் அவருடைய கட்சியும் அவர்களுக்கு முன்னர் இருந்த அரசுகளை போன்று ஜனநாயகத்திலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பிலும் நம்பிக்கையை வைத்துள்ளனர்.

அவருடைய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு “Mr.U-Turn” எனும் பட்டப்பெயருக்கு தகுதியுடைவராக ஆகிவிட்டார். அமெரிக்க அயலுறவு அமைச்சர் மைக் போம்பியோ மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி, ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் ஆகியோரின் சமீபத்திய பாகிஸ்தானிய விஜயமானது அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள உறவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இஸ்லாமாபாதிற்கு அவர்கள் வருகை தருவதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நலன்களை பாதுகாக்க வேண்டும் அல்லது மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்தது.

முந்தய அரசுகளை போன்றே, பாகிஸ்தானிய அயலுறவு அமைச்சர் தனது சகாவை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் பிரதம மந்திரியான இம்ரான் கானும் போம்பியோவை உபசரித்தார்.

ஆக அவர் பதவியேற்ற நூறு நாட்களுக்கு உள்ளாக, வெற்று முழக்கங்களை தாண்டி வேறு எந்த விதமான மாற்றமும் ஏற்படாமல் முன்பிருந்த நிலையே தொடர்ந்து நீடிப்பது தெளிவாக தெரிகிறது.

அமெரிக்கா “அதிகமாக செயலாற்றுங்கள்” என்று கோரிய போது முந்தய அரசு “இனி இல்லை” என்று கூறியது, ஆனால் இப்போது இந்த அரசு உறவை “மீட்டமைக்க”ப்போவதாக கூறி வருகிறது. ஆக, இந்த புதிய ஆட்சியாளர்களோ பாகிஸ்தானிய தேசத்தின் நலனை பாதுகாப்பதாக கூறி பாகிஸ்தானுடைய இழப்பில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க நலன்களை பாதுகாப்பதில் முந்தய ஆட்சியாளர்களை பின்பற்றி வருகின்றனர். இந்த நாட்டில் இரத்தம் சிந்துவதற்கான செயலை செய்ததாக நிரூபிக்கப்பட்ட பதிவுகள் இருந்தும் அமெரிக்க உளவுத்துறையும் தனியார் இராணுவமும் இன்னும் தீண்டப்படாமல் இருக்கின்றன. அமெரிக்காவுக்காக உளவு பார்க்கும் கேந்திரங்களாக விளங்கி வரும் நிலையிலும் அமெரிக்க தூதரகமும் இணைத்தூதரகங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு முக்கிய உயிரோட்டமாக விளங்கும் நேட்டாவுக்கான விநியோக பாதையும் தடுக்கப்படாமல் தொடர்ந்து பாகிஸ்தான் வழியாக இயங்கி வருகிறது. மேலும் ஆட்சியளர்களோ ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா  மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக்கு அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக்குவதற்காக ஆப்கானிய தாலீபான்களை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தூண்டி வருகின்றனர். நிச்சயமாக, நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத் மீண்டும் நிலைநாட்டப்படும்போது மட்டும் தான் மாற்றம் ஏற்படும் என்பது தெளிவாகிறது.

Comments are closed.